80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்டம்’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘ஒரு கைதியின் டைரி’.
இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.
டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids
பாரதிராஜாவின் தொடர் வெற்றிக்குக் காரணம் அவருடைய டைரக்ஷன் திறமையைத் தாண்டி அவருடைய படைப்புகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த வரிசையில் குறிப்பாக இளையராஜா, வைரமுத்து, ஆர்.செல்வராஜ், கலைமணி, ஒளிப்பதிவாளர்கள் நிவாஸ், கண்ணன் போன்ற கலைஞர்கள் அடிக்கோடிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள். ஏதோவொரு காரணத்தால் இந்தக் கூட்டணி அமையாத பாரதிராஜாவின் படங்களை – குறிப்பாக பிற்காலப் படங்களைப் பாருங்கள். அவற்றில் ஏதோவொரு வசீகரம் கணிசமாகக் குறைந்திருக்கும். அந்த வெற்றிடமே படத்தின் வணிக ரீதியான தோல்விக்குக் கூட காரணமாக இருந்திருக்கக்கூடும்.
இப்படி பாரதிராஜாவிற்கு உறுதுணையாக இருந்தவர்களில் அவரின் உதவி இயக்குநர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. மணிவண்ணன், மனோபாலா என்று அந்தப் பட்டியல் பெரிதாக நீளும். இதில் பிரத்யேகமாக குறிப்பிடத்தகுந்தவர் கே.பாக்யராஜ். பாரதிராஜாவின் தொடர் வெற்றிக்கு பாக்யராஜிற்கு இருந்த திரைக்கதை ஞானம், கோர்வையாகவும் சுவாரஸ்யமாகவும் கதை சொல்லும் திறமை, வெகுசன பார்வையாளனின் ரசனையைத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தது போன்ற விஷயங்கள் மிக உதவிகரமாக இருந்தன. பாக்யராஜ் இயக்குநராக பிரமோஷன் ஆகி, பாரதிராஜாவை விட்டு விலகி விட்ட பிறகான திரைப்படங்களில் இந்த வெற்றிடத்தை உணர முடியும்.
ஒரு மையக்கதையை உருவாக்கி விட்ட பிறகு அதன் வரைபடத்தை மனதில் இருத்திக் கொண்டு படப்பிடிப்பிற்குச் சென்ற பிறகு காட்சிகளை மேம்படுத்துவது பாரதிராஜாவின் ஸ்டைல். ஆனால் பாக்யராஜோ க்ளைமாக்ஸ் முதற்கொண்டு பலவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு எழுதி வைத்துவிடுவார். கதை வசனத்திற்கு பாக்யராஜ் முக்கியத்துவம் தரும் அதே வேளையில் பாரதிராஜாவோ அவற்றை விடவும் அழகியல் ரீதியிலான காட்சிகளைக் கொண்டே சினிமா எடுக்கும் பாணியைப் பின்பற்றுபவர்.
குருவிற்கு உதவ ஓடி வந்த சீடன் பாக்யராஜ்
‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம் உருவான பின்னணியைப் பற்றிப் பார்ப்போம். கமல்ஹாசனை வைத்து ‘டாப் டக்கர்’ என்கிற தலைப்பில் ஒரு திரைப்படத்தை எடுக்கத் துவங்கினார் பாரதிராஜா. ஒரு ஷெட்யூல் முடிந்து எடுத்த வரையான காட்சிகளைப் போட்டுப் பார்த்தால் அது ‘சிகப்பு ரோஜாக்களின்’ அப்பட்டமான சாயலில் இருந்தது. அதிர்ச்சியடைந்த பாரதிராஜா அந்தக் காட்சிகளை அப்படியே தூக்கிப் போட்டார். சன்னி தியோலை வைத்து எடுக்கத் திட்டமிட்டிருந்த இன்னொரு படமும் (கிழக்கே போகும் ரயிலின் இந்தி ரீமேக்) நடிகரின் வளர்ந்து விட்ட இமேஜ் காரணமாக நின்று போனது. இதனால் ஏற்பட்ட குழப்பங்களில் பாரதிராஜா மும்பையில் தவித்துக் கொண்டிருந்தார்.
அதே சமயத்தில் பாக்யராஜின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட இழப்பு நோ்ந்தது. அவருடைய மனைவி பிரவீணா இறந்து போனார். இது சார்ந்த உளைச்சலில் உழன்று கொண்டிருந்த பாக்யராஜ், தனது குருநாதர் பட்டுக் கொண்டிருந்த சிரமத்தை எப்படியோ அறிந்தார். உடனே ஓடிச் சென்று “கதையை மேம்படுத்தி தருகிறேன்” என்று உதவ முன்வர, “நீ இப்ப பெரிய நடிகர், டைரக்டர் ஆயிட்ட… வேணாம்ப்பா” என்று பாரதிராஜா மறுக்க, “என்னோட குரு சிரமப்படும் போது உதவாவிட்டால் நான் என்ன மாணவன்?!” என்ற பாக்யராஜ், அடுத்த சில நாள்களிலேயே சுடச்சுட எழுதித் தந்த கதைதான் ‘ஒரு கைதியின் டைரி’.
தக்க சமயத்தில் பெருந்தன்மையுடன் தனக்கு உதவி செய்த பாக்யராஜிற்கு, அதுவரை இல்லாத வழக்கமாக, டைட்டில் கார்டின் ஆரம்பத்திலேயே ‘கதை – வசனம்: கே.பாக்யராஜ்’ என்று போட்டு பெருமைப்படுத்தினார் பாரதிராஜா. இதில் என்னவொரு விசேஷம் என்றால் பாக்யராஜ் தந்த கதையை சில மாற்றங்களுடன் பாரதிராஜா இயக்கினார். அமிதாப் பச்சனை வைத்து ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு வந்த காரணத்தால், இதே கதையை பாக்யராஜூம் தன்னுடைய பாணியில் இந்தியில் இயக்கினார். அதன் தலைப்பு ‘ஆக்ரி ராஸ்தா’. இரண்டு திரைப்படங்களுமே ‘சூப்பர் ஹிட்’ திரைப்படங்களாக அமைந்தன.
இந்தி வடிவத்தை பிறகு பார்த்த பாரதிராஜா, “என்னுடைய படம் ஆக்ஷன் மூவி மாதிரி இருக்கிறது. ஆனால் நீ இயக்கியதோ சென்டிமென்ட் வேல்யூவுடன் இருக்கிறது” என்று பாராட்டினார். க்ளைமாக்ஸ் மற்றும் சில காட்சிகளை தன்னுடைய பாணியில் பாக்யராஜ் அமைத்திருந்ததே இதற்குக் காரணம். இந்த வகையில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக பாக்யராஜ் இருந்தார் எனலாம்.
பாரதிராஜாவிற்குள் ஒரு எஸ்.பி.முத்துராமன்
தந்தை – மகன் என்று இரு வேடங்களில் கமல் நடித்த திரைப்படங்களுள் ஒன்று, ‘ஒரு கைதியின் டைரி’. ‘கடல் மீன்கள்’ திரைப்படத்தில் வயதான பாத்திரத்தில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் இதில் வயதான கமலின் தோற்றம் சற்று வித்தியாசமாக அமைந்ததற்கு ஒரு காரணம் ஹாலிவுட் மேக்கப்தான். ஆம், மைக்கேல் வெஸ்ட்மூர் என்கிற ஒப்பனைக் கலைஞருடான கமலின் கூட்டணி இந்தத் திரைப்படத்தில்தான் துவங்கியது.
இது பாரதிராஜா இயக்கிய படம்தான் என்றாலும் சில காட்சிகளைத் தவிர ஒரு சம்பிரதாயமான வெகுசன சினிமா பாணியில்தான் படம் இருந்தது. அதாவது பாரதிராஜாவின் அடிப்படையான ஸ்டைலைத் தாண்டி எஸ்.பி.முத்துராமன் போன்ற மசாலா இயக்குநர்களின் வாசனையே அதிகமாக அடித்தது.
‘ஒரு கைதியின் டைரி’ எதைப் பற்றிய படம்?
அப்பா கமல், விசுவாசமான கட்சித் தொண்டராக இருப்பார், ஆனால் அந்த அரசியல் தலைவரோ, கமலின் மனைவியான ராதாவின் அழகால் கவரப்பட்டு, அவரை சீரழித்துக் கொன்று விடுவதோடு, அந்தக் கொலைப்பழியை கமலின் மீதே போட்டு சிறைக்கு அனுப்பிவிடுவார். இவரின் படுபாதகச் செயலுக்கு உடந்தையாக ஒரு இன்ஸ்பெக்டரும், டாக்டரும் இருப்பார்கள். ஆயுள் தண்டனையை சிறையில் கழித்துவிட்டு திரும்பும் அப்பா கமல், தன்னுடைய மூன்று எதிரிகளையும் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.
இதில் ஒரு சுவாரஸ்யமான முரணும் இருக்கும். சிறைக்குச் சென்றிருக்கும் கமலுக்கு ஒரு மகன் இருப்பான். அவன் ஜனகராஜால் வளர்க்கப்பட்டு நோ்மையான காவல்துறை அதிகாரியாக இருப்பான். ஒரு பக்கம் பழிவாங்கும் உணர்ச்சியோடு கொலைவெறியுடன் சுற்றும் கமல் (அப்பா). இன்னொரு பக்கம் அவரைப் பிடிப்பதற்காக துடிப்புடன் அலையும் இன்னொரு கமல் (மகன்). இந்த எதிர் முனைகளின் சுவாரஸ்யத்தைக் கொண்டு திரைக்கதை பரபரவென்று விறுவிறுப்பாக நகரும். (ஷங்கர் இயக்கத்தில் பின்னர் வெளிவந்த ‘இந்தியன்’ திரைப்படத்தின் கதை வாசனை முன்பே இதில் வந்துவிட்டது.)
இந்தத் திரைப்படத்தின் ஆதாரமான சுவாரஸ்யம் என்பதே அந்தப் பழிவாங்குதல் சம்பவங்கள்தான். மூன்று கொலைகளிலுமே அதை எளிதில் செய்ய முடியாதவாறு பெரிய நெருக்கடியான சூழல் உருவாக்கப்பட்டிருக்கும். ‘இத்தனை பெரிய தடைகளைத் தாண்டி எப்படி ஹீரோ பழிவாங்கப் போகிறார்?’ என்று நமக்குள் பயங்கர ஆர்வம் ஏற்படும். போதாக்குறைக்கு இதைச் செய்யப் போகிறவர் வயதானவர் வேறு. இன்னொரு பக்கம் அவரைத் துரத்திக் கொண்டிருக்கும் இளைஞர்.
‘நடக்கவே தள்ளாடும் ஒரு முதியவரால் சம்மர் சால்ட் அடித்து பாய்ந்து ஓட முடியுமா?’, ‘இத்தனை சாகசங்கள் செய்ய முடியுமா?’, ‘இதெல்லாம் சாத்தியமா?’ என்றெல்லாம் கறாரான லாஜிக் மட்டும் பார்க்காவிட்டால், மூன்று பழிவாங்கல் சம்பவங்களுமே தரமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட கொலை முடியும் வரை ‘அது சரியாக நடக்க வேண்டுமே’ என்கிற பதைபதைப்பும் ‘எப்படி நடந்து முடியுமோ?’ என்கிற திகைப்பும் நமக்குள் உருவாகும் படியான விறுவிறுப்பைக் கூட்டியிருப்பார்கள்.
கமல் – கமல் – ராதா – ரேவதி
சீனியர் கமலின் காதல் மனைவியாக ஆரம்பக் காட்சிகளில் வந்து பரிதாபமாக செத்துப் போவார் ராதா. ‘இந்தப் படிக்காதவனை கட்டிக்கிட்டு எப்படி உருப்படுவே?’ என்று திருமணத்தின் போது ராதாவின் தந்தை கமலை அவமதித்து விடுவார். இதன் காரணமாக, ‘எழுத்துக் கூட்டி வாசிக்கும் அளவிற்காவது ஆங்கிலம் படித்தால்தான் நமக்குள் முதலிரவு’ என்று ராதா செல்லக் கோபத்துடன் கமலை மிரட்டுவதும் அதற்கு கமல் திருட்டுக் கெஞ்சலுடன் ரொமான்ஸ் செய்வதும் ரகளையான காட்சிகள்.
ஜூனியர் கமலின் காதலியாக ரேவதி நடித்திருந்தார். “நீ ஏன் என்னைப் பார்க்க வரலே?” என்று கமலைத் தொடர்ந்து இம்சிப்பதும் “நான் டி.ஐ.ஜியோட பொண்ணு. இந்த பில்டிங்ல நான் வெச்சதுதான் சட்டம்” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் பந்தா பண்ணுவதும் என ஜாலியாக அலப்பறைகளைக் கூட்டியிருப்பார். மகனை விடவும் அப்பா கமலுடன்தான் ரேவதியின் காம்பினேஷன் சிறப்பாக அமைந்திருக்கும்.
சூழல் காரணமாக ரேவதியைக் கடத்தி வைத்திருப்பார் அப்பா கமல். போலீஸாரால் தேடப்படும் கொலைக்குற்றவாளி என்பதால் பூச்சாண்டி ரேஞ்சிற்கு அவரைக் கண்டு முதலில் அஞ்சுவார் ரேவதி. பிறகு மெல்ல சமாதானமாகி ‘அங்கிள்… அங்கிள்’ என்று அழைக்க ஆரம்பிப்பதும், கமலின் பிளாஷ்பேக்கை அறிந்ததும் கண்கலங்கி “நீங்க செய்யறது தப்பா தெரியல” என்று மனம் மாறுவதும், அவர்தான் தன் மாமனார் என்பதை ஒரு கட்டத்தில் அறிந்து “மாமா… உங்க ஆசிர்வாதம் வேணும்” என்று கலங்குவதும் உருக்கமான காட்சிகளாக அமைந்திருந்தன.
இதைப் போலவே அப்பா – மகன் சென்டிமென்ட் தொடர்பான காட்சிகளும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தன் மகனின் முகத்தைப் பார்க்கத் தவிப்பதும், ஒரு சண்டைக்காட்சியில் தன்னுடன் மோதும் மகனைக் காப்பாற்ற உதவுவதும், மகனிடமே சவால் விடுவதும் என்று பல காட்சிகளில் அப்பா கமல் அசத்தியிருந்தார். ஒரே நடிகர் இரு வேடங்களில் நடிப்பதென்பது ஒரு பெரிய சவால். இரண்டுமே வெவ்வேறு பாத்திரம் என்பதை அனைத்துக் காட்சிகளிலும் பார்வையாளர்கள் நம்ப வேண்டும். அப்போதுதான் இந்த இரட்டை வேடம் வெற்றி பெறும். இதில் நடிகர்கள் முதற்கொண்டு இயக்குநர், சாமர்த்தியமான கோணங்களை வைக்கும் ஒளிப்பதிவாளர், பிசிறு தெரியாமல் காட்சிகளை வரிசைப்படுத்தும் எடிட்டர் என்று பலரின் பங்கும் இருக்கிறது.
அப்பா கமலின் பழைய ‘தோஸ்த்’ ஆக ஜனகராஜ் நடித்திருந்தார். அவருக்கான நகைச்சுவை இடம் குறைவு என்றாலும் சீரியஸான காட்சிகளில் கூட சற்று இடைவெளி கிடைத்தாலும் அதில் ஸ்கோர் செய்து அசத்தியிருப்பார். “என் புள்ளைய அயோக்கியனாத்தானே வளர்க்கச் சொன்னேன்?” என்று அப்பா கமல் மிரட்டும் போது வாயில் மதுவை ஊற்றிக் கொண்டே பம்முவதும், பிறகு அதற்கான காரணத்தைக் கண்ணீர் மல்கச் சொல்வதும் என தன்னுடைய பங்கைச் சிறப்பாகத் தந்திருப்பார் ஜனகராஜ். அரசியல்வாதியாக மலேசியா வாசுதேவன், காவல்துறை அதிகாரியாக வினுச்சக்கரவர்த்தி, டாக்டராக விஜயன் ஆகிய மூவரும் மெயின் வில்லன்களாக நடித்திருந்தார்கள்.
மரபை உடைத்த பாரதிராஜா
‘இளையராஜாவின் பாடல்கள் இனிமையாக அமைந்திருந்தன’ என்கிற வாக்கியமே ஒரு கிளிஷேதான். குறிப்பிடவே தேவையில்லை. கமலுக்கு ராதா ஆங்கிலம் கற்றுத் தரும் சூழலுக்கு உருவாக்கப்பட்ட ‘ஏ பி சி… நீ வாசி…’ என்ற பாடலை ஜேசுதாஸூம் வாணி ஜெயராமும் அருமையாகப் பாடியிருந்தார்கள். கோபித்துக் கொண்ட காதலியை சமாதானப்படுத்தும் பாடலான ‘பொன்மானே’–வை உன்னிமேனனும் உமா ரமணனும் தங்களின் இனிமையான குரலில் மறக்க முடியாத பாடலாக மாற்றியிருந்தார்கள். அனுராதா, சில்க் ஸ்மிதா போன்றவர்கள் நடனமாடும் கவர்ச்சிப்பாடல்கள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. இதில் அப்படியொரு பாடல் உண்டு. அனுராதாவின் நடனத்தில் ‘இது ரோசாப்பூ’ என்கிற பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார். எஸ்.பி.பி மற்றும் குழு பாடிய ‘நான்தான் சூரன்’ என்கிற பாடல் படத்தில் இடம்பெறவில்லை போல. பாடல்கள் தவிர, பரபரப்பான காட்சிகளுக்கு தனது பிரத்யேகமான பின்னணி இசையின் மூலம் விறுவிறுப்பை அதிகமாகக் கூட்டியிருப்பார் இளையராஜா.
பாரதிராஜாவின் முக்கியமான அடையாளமே கிராமத்துப் பின்னணியுடனான திரைப்படங்கள்தான். கிராமத்துப் பாணியில் அமைந்த அவரது முதல் ஐந்து திரைப்படங்களுமே ‘சில்வர் ஜூப்ளி’ சாதனையை படைத்தது. அவர் நினைத்திருந்தால் தனது பயணத்தை அப்படியே பாதுகாப்பாகத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், படப்பிடிப்புத் தளங்களின் செயற்கையான பின்னணியை உதறி எப்படி கேமராவைத் தூக்கிக் கொண்டு கிராமங்களுக்குச் சென்று புரட்சி செய்தாரோ, அதே போல் அவரது வழக்கத்தை அவரே உடைத்துக் கொண்டு ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்னும் சைக்கலாஜிக்கல் திரில்லரை உருவாக்கி பலரையும் பிரமிப்பூட்டினார். இன்று பார்த்தாலும் கூட ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகரான பாணியில் அந்தப் படம் இருப்பதை உணர முடியும். ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படமும் இம்மாதிரியான ஒரு பரிசோதனை முயற்சியே. ஆனால் சிகப்பு ரோஜாக்களில் இருந்த புத்துணர்ச்சியும் புதுமையும் இல்லாமல் ‘ஒரு கைதியின் டைரி’ ஒரு சாதாரண கமர்சியல் படமாக மட்டுமே அமைந்துவிட்டது.
சிறையிலிருந்து திரும்பும் வயதான கமல், ஒரு சர்ச்சின் முன்னால் அப்படியே உறைந்து நின்றுவிடுவார். அதன் வளாகத்தில் வாகனங்களும் மனிதர்களும் வந்து சேரும் காட்சி, துண்டு துண்டாக தவளைப் பாய்ச்சல் முறையில் இணைத்து காட்டப்படும். கமலின் திருமணக்காட்சி மூலம் பிளாஷ்பேக் துவங்கும். இது போன்ற அரிதான காட்சிகளில் மட்டுமே பாரதிராஜா தெரிந்தாரே ஒழிய, மற்ற சமயங்களில் இதுவோரு மசாலா படமாகவே தெரிந்தது. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டால், இன்றளவும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த ஜனரஞ்சக திரைப்படம் – ஒரு கைதியின் டைரி.