ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதலாவது கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐஸ் உற்பத்தி, கடலுணவு பதப்படுத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை பார்வையிட்டார்
அதன் பின்னர், இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஒருநாள் மீன்பிடிப் படகுகளின் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து அதன் ஊடாக ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது தொடர்பான பூரண அறிக்கையினை ஒரு வார காலத்தினுள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
வர்த்தக துறைமுகமாக அமைக்கப்பட்டுள்ள பகுதியில், பலநாள் ஆழ்கடல் பிடிக் கலன்களை செயற்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் இதன் போது ஆராய்ந்தார்.
இதே வேளை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகத்தின் பணியாளர்கள், தற்போதைய அசாதாரண நிலமைகளை கருத்தில் கொண்டு தமது இடமாற்றத்திற்கு மாற்று ஏற்பாடு செய்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.