குடும்ப சூழ்நிலையால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பெண், 53 வயதை கடந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 53 வயதான பெண்ணான கல்பனா அச்யுத் என்பவர் 10ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதி 79.6 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது 16வது வயதில் தந்தை இறந்துபோனதன் காரணமாக அச்சமயத்தில் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கல்பனா அச்யுத் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினார். அதன்பின் திருமணம், குழந்தைகள், குடும்பம் என வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்தாலும் 10ஆம் வகுப்பு தேர்வெழுதி ‘பாஸ்’ ஆகிவிட வேண்டும் என்கிற வேட்கை அணையாத நெருப்பைப் போல கல்பனாவின் மனசுக்குள் கனன்று கொண்டிருந்தது.
இந்நிலையில், அரசின் இரவு நேர பள்ளிக்கு சென்று தேர்வுக்கு தயாராகி வந்த கல்பனா இந்த ஆண்டு நடந்த 10ம் வகுப்பு தேர்வை எழுதி தேர்ச்சி அடைந்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாகவும், தற்போது கனவை நனவாக்கி விட்டதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ள கல்பனா, தனது கணவர் மற்றும் மகன்களுக்கு தெரியாமல் இரவு நேர பள்ளிக்கு சென்று தேர்வுக்கு தயாராகி வந்ததாக தெரிவித்துள்ளார்.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டு வெளியேறிய பெண் 37 வருடங்கள் கழித்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பலருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் அநேகர் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் கொடுக்கறது? திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM