உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும் சிக்கலில் தத்தளிக்கிறது.
தன்னுடன் 46 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் பெரும்பாலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின தன்னை ஆதரிப்பதாகவும் கிளர்ச்சி குழுவின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் தனக்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தெரிவிக்க ஏக்நாத் ஷிண்டே ஆளுநரிடம் அவகாசம் கோரியுள்ளார். கிளர்ச்சி சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்காத நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யக் கூடாது என கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியதாக சிவ சேனா கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதனால் அவரை சந்திக்க முடியவில்லை எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத் தெரிவித்தார்.
முன்னதாக சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் மாறாக சட்டசபையை கலைக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அத்தகைய நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தினார். பின்னர் சிவ சேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாலை நடைபெறும் என்றும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவசேனா கட்சி தெரிவித்தது.
அதேசமயத்தில் ஏக் நாத் ஷிண்டே தனக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும், சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர்களை தவிர பல சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களும் தன்பக்கம் உள்ளதாக தெரிவித்தார். ஒரு பக்கம் சிவசேனா தலைமை மற்றும் ஏக் நாத் ஷிண்டே தலைமையில் செயல்படும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என மகராஷ்டிரா அரசியல் தலைவர்கள் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் குஜராத் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சிவ சேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் முகாமிட்டது இந்த பிரச்சினையின் பின்னணியில் சிவசேனா கட்சி உள்ளது என அவர்கள் கருதுகின்றனர். ஏக் நாத் ஷிண்டே மற்றும் சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர்.
-கணபதி சுப்பிரமணியம்
இதையும் படிக்கலாம்: அசாம் பறந்தனர் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் – ஆட்சியை தக்க வைப்பாரா உத்தவ் தாக்கரே?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM