பர்மிங்காம்,
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது கொரோனா பரவல் காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் 5-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் அவர் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை உடனடியாக விளையாட அழைக்க வேண்டாம் என இந்திய அணியின் மருத்துவ குழு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதனால் இங்கிலாந்து கவுண்டி அணி லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பயிற்சி ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையில் கோலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து பிசிசிஐ தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.