மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் விரும்பினால் பதவி விலக தயார் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 2019 ஆம் ஆண்டு முதல் சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
பாஜக ஆளும் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு 40 எம்எல்ஏக்களுடன் சென்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார். சுயேச்சை எம்எல்ஏக்கள் 7 பேர் உள்பட மொத்தம் 46 எம்எல்ஏக்கள் தங்களுடன் இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
பாஜகவில் அவர்கள் இணையலாம் என்று கூறப்படும் நிலையில், மாற்று அரசு அமைக்க ஷிண்டே முன்மொழிந்தால் பாஜக நிச்சயம் பரிசீலிக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார். தற்போதைய நிலையில் அரசு பெரும்பான்மையை இழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிவசேனா எம்எல்ஏக்கள் 30 பேர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேர் ஆகியோர் ஏக்நாத் ஷிண்டேவை தங்களது தலைவராக ஏற்பதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். தகுதி நீக்கம் இல்லாமல் சிவசேனா கட்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் 7 எம்எல்ஏகளின் ஆதரவு மட்டும் ஷிண்டேவுக்கு தேவைப்படுகிறது.
மராட்டியத்தில் திடீர் என அரசியல் சூழல் மாறியிருக்கும் நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திடீர் அரசியல் குழப்பம் குறித்து கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் முகநூல் வழியாக நேரலையில் உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, அதிருப்தி எம்எல்ஏக்கள் விரும்பினால் தாம் பதவி விலக தயார் என்று தெரிவித்தார். ஒரே ஒரு எம்எல்ஏ தனக்கு எதிராக இருந்தாலும் அது தனக்கு மிகவும் அவமானகரமானது என்று உருக்கமுடன் பேசினார்.
சிவசேனா கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவும் தான் தயாராக இருப்பதாகவும், கட்சியில் மற்றொருவர் முதலமைச்சராக வந்தாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 எம்எல்ஏக்களில் ஒருவர் உயிரிழந்ததால் தற்போது 287 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.க்களும், தேசியவாத காங்கிரஸுக்கு 53 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மை பலத்திற்கு 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகள் 36 பேர் ஆதரவு அளிக்கும்பட்சத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.