வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜெர்மனியில் ஜூன் 26, 27 தேதிகளில் நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதற்காக ஜெர்மனி செல்ல உள்ள அவர், மாநாட்டை முடித்துக்கொண்டு 28ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ஜெர்மனியில் வரும் ஜூன் 26, 27 தேதிகளில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி செல்ல இருக்கிறார். இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இரு நாட்கள் நடைபெறும் உச்சி மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் சந்தித்து பேச இருக்கிறார். இப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜூன் 28ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு அவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபராகவும், அபுதாபின் ஆட்சியாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரு தலைவர்களும் முதல்முறையாக சந்தித்து பேச இருக்கின்றனர்.
Advertisement