ஜோர்டனில் இருந்து திரும்பிய உடனே மோகன்லாலை சந்தித்த பிரித்விராஜ்
நடிகர் பிரித்விராஜ் கடந்த நான்கு வருடங்களாக அவ்வப்போது இடைவெளிவிட்டு நடித்து வரும் படம் ஆடுஜீவிதம். பிளஸ்சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார். கொரோனா தாக்கத்திற்கு முன்னதாக ஜோர்டன் நாட்டில் பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்தி திரும்பியவர்கள், இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கடந்த இரண்டு மாதங்களாக ஜோர்டனில் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரித்விராஜின் மனைவி சுப்ரியாவும் தனது கணவரை பார்ப்பதற்காக ஜோர்டானுக்கு கிளம்பிச் சென்றார். அதன்பின் சில நாட்கள் கழித்து படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இருவரும் கேரளா திரும்பியுள்ளனர். வந்தவுடனேயே மோகன்லாலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து மகிழ்ந்துள்ளனர் பிரித்விராஜும் அவரது மனைவி சுப்ரியா மேனனும். இந்த புகைப்படத்தை பதிவிட்டு வீடு திரும்பினோம் என குறிப்பிட்டுள்ளார் சுப்ரியா மேனன்.
மோகன்லாலை பொறுத்தவரை பிரித்விராஜ் அவருக்கு ஒரு உடன்பிறவா சகோதரர் போல.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பிரித்விராஜ் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாக முடிவு செய்தபோது மோகன்லாலை ஹீரோவாக வைத்து தான் லூசிபர் என்கிற படத்தை இயக்கினார். தனது டைரக்சனில் இரண்டாவது படமான புரோ டாடி படத்திலும் மோகன்லாலை நடிக்க வைத்து அவருக்கு மகனாகவும் நடித்தார் பிரித்விராஜ்.
விரைவில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்திலும் மோகன்லாலை இயக்க உள்ளார். முக்கியமான விசேஷ நிகழ்வுகள் எதிலும் தவறாமல் மோகன்லாலை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ள பிரித்விராஜ், இரண்டு மாதம் கழித்து கேரளா திரும்பியதும் உடனே மோகன்லாலை தேடிச்சென்று சந்தித்ததில் ஆச்சரியம் என்ன இருக்கப்போகிறது?