ட்ரெண்டிங்கில் #ThaaiKelavi ஹேஷ்டேக்.. அசத்தலான திருச்சிற்றம்பலம் அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் தொடர்பாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் ஜூன் 24 ஆம் தேதி வெளியாகிறது என்பது தான் அந்த அப்டேட். இதுதொடர்பாக தகவலை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 7 வருடங்களுக்கு பின் அனிருத் உடன் ஒரு பாடல் வெளியாகிறது என்றும் இது ஸ்பெஷலானது என்றும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அனிருத்தின் பாடல் புரமோ ஒன்றினையும் இணைத்துள்ளார்.

image

அந்த புரமோ வீடியோவில், அனிருத் தன்னுடைய ஸ்டூடியோவில் நாட்டாமை படத்தில் வரும் மனோரமா, பொன்னம்மலம் இடையிலான தாய் கெழவி காட்சியை திரும்ப திரும்ப அனிருத் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் நடன இயக்குநர் சத்தீஷ் பாடலின் வரியை கேட்கிறார். பாடல் வரிகள் இருந்தால் தான் தன்னால் நடனத்திற்கு ஒத்திகை பார்க்க முடியும் என்று அனிருத்திடம் கூறுகிறார். ஆனால், அனிருத் திரும்ப திரும்ப அந்த தாய்க்கிழவி காட்சியையே போட்டுக் காண்பிக்கிறார். கடுப்பான சத்தீஷ் பாடல் வரிகளை கேட்டால் ஏன் திரும்ப திரும்ப போடுகிறாய் என கேட்க, தாய் கெழவி தான் பாடலின் முதல் வரி என்று அனிருத் சொல்கிறார். உடனே பாடலின் ட்யூன் ஒலிக்கிறது. இந்த தகவல் வெளியானவுடன் #ThaaiKelavi ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

image

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு 4-வது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹருடன், தனுஷ் இணைந்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் தனுஷுடன், அனிருத் கூட்டணி அமைத்து இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இந்தப் படம், நடிகர் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

இதையும் படிக்கலாம்: முதல் சம்பளம் முதல் பட ரிலீஸ் வரை! -இது விஜய் 10

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.