சென்னை: தமிழகத்தில் ஒரே மாதத்தில் பி.ஏ.5 வகை தொற்று 21 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக சோதனைகளை அதிகரிப்பது, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மேலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்ய மரபனு பரிசோதனை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குழு பரவல் அதிகரித்து வரும் நிலையில் கரோனா மூன்றாவது அலையில் நோய் பரவல் அதிகமாக காரணமாக அமைந்த ஓமிக்கிரான் வகை பாதிப்புகள் தற்போது உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும் எட்டு வகையான உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
இதில் தமிழகத்தில் பி.ஏ.5 என்ற ஓமிக்கிரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இதன் பாதிப்பு 4 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது 21 சதவீதம் அதிகரித்து பாதிப்பு அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறையின் மரபணு பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு அதிகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது