சென்னை: தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகா எந்த அணையும் கட்ட முடியாது என மத்தியமைச்சர் உறுதி அளித்ததாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத்தி இருந்தார். அதில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து காவிரி மேலாண்மை கூட்டம் அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் டெல்லி சென்றனர். அவர்கள் இன்று பிற்பகல் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரை சந்தித்து, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் துரைமுரகன், தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகா எந்த அணையும் கட்ட முடியாது என்ற உறுதியை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அளித்துள்ளார் என கூறினார்.
தமிழகஅரசின் அனைத்துக்கட்சி குழுவில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.