நாடாளுமன்றத் தேர்தலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கட்சி அறுதிப் பெரும்பான்மையை இழந்தாலும், அவருடன் நிற்போம் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க மாகாணத்துறை செய்தித்தொடர்பாளரான Ned Price, ஜனாதிபதி மேக்ரான், மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார் என்று கூறினார்.
கூட்டாளிகள் என்ற முறையில், ரஷ்யா முன்வைக்கும் சவால்கள் முதலான சவால்களை எதிர்கொள்ள மேக்ரான் அரசுடன் நாம் நெருக்கமாக தொடர்ந்து செயல்பட இருக்கிறோம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார் அவர்.
மேக்ரான், ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அவரது கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.
அதனால், உக்ரைன் போர் தொடர்பான விடயங்களில் முழு மூச்சாக கவனம் செலுத்திவந்த மேக்ரான், ஆட்சி அமைப்பதற்காக அரசியல் எதிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நிலைக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.