புதுடில்லி-தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டு விட்டன என்பதை முத்திரை தாளில் உறுதி அளித்து தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான லோகேஷ் பாத்ரா என்பவர், தேர்தல் ஆணை யத்தில் தகவல் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், நிதி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு 2017ல் அமல்படுத்தப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திர விற்பனை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கேட்டிருந்தார். தேர்தல் ஆணையம் அனைத்து ஆவணங்களையும் அளித்தது.
ஆனால், அதில் ஒரு சில ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஆணையத்தில் லோகேஷ் பாத்ரா முறையிட்டார். இந்த மனு, தலைமை தகவல் ஆணையர் ஒய்.கே.சின்ஹா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘லோகேஷ் பாத்ரா கேட்ட அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டு விட்டன.’
இதில் தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் தவறவிடப்படவில்லை’ என, முத்திரை தாளில் உறுதியளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதை மூன்று வாரங்களுக்குள் அளிக்கவும் தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement