புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் நேற்றும் 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் 3 நாட்களில் சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த வியாழக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஆனால், தனது தாயார் சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவகாசம் கோரியதை தொடர்ந்து ஜூன் 20ம் தேதி ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் 4வது நாளாக விசாரணைக்கு ராகுல் ஆஜரானார். தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 11.15 மணியளவில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். இரவு 8 மணி வரை அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 9 மணி நேரம் விசாரணை நடந்த நிலை யில், அரைமணி நேரம் இடைவெளிக்கு மீண்டும் ஆஜராக ராகுல் காந்திக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்படுவதை கண்டித்து தடையை மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். போலீசார் மீது எச்சில் துப்பிய மகளிர் தலைவிடெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, மகளிர் காங்கிரஸ் தலைவியான நேட்டா டிசோசா படியில் நின்றபடி, கீழே நின்ற போலீசார் மீது எச்சிலை துப்பி ஆவேசமாக திட்டினார்.