புதுடெல்லி: அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜெஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகிறது. ஏஜெஎல் நிறுவன பங்குகளை யங் இண்டியன் நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
இதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆஜரானார். அவரிடம் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் 4-வது நாளாக ராகுலிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றது. நேற்று முன்தினம் வரை 42 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி 5-வது நாளாக நேற்று காலை 11.15 மணிக்கு அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். ராகுல் வருவதை முன்னிட்டு அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். சில நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு சோனியாவிடம் மருத்துவர் கள் கூறியுள்ளனர்.