டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து ஆஜராவதில் விலக்கு கேட்டு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகளை சட்டவிரோதமாக மாற்றிய விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமலாக்கத்துறை விசாரணை நடத்த வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, எம்.பி.ராகுல்காந்தி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. கொரோனா தொற்று காரணமாக சோனியாகாந்திக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதையடுத்து சோனியாகாந்தியை நாளை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் விசாரணையில் இருந்து ஆஜராவதில் விலக்கு கேட்டு சோனியாகாந்தி அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மருத்துவர்களின் ஆலோசனையின் படி, வீட்டுச் சிகிச்சையில் இருப்பதாகவும், எனவே பூரண சுகம் அடையும் வரை விசாரணையில் இருந்து ஆஜராவதில் விலக்கு அளிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி 6-வது நாளாக ஆஜராகி விளக்கமளித்து வருவது குறிப்பிடத்தக்கது.