பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு பாமக ஆதரவு

சென்னை: பாஜக கூட்டணி சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் பழங்குடியினராக களம் இறக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு தமிழத்திலிருந்து பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவும் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராகிய திரவுபதி முர்மு அவர்களை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்தக் கோரிக்கை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் இன்று காலை கலந்தாய்வு நடத்தினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஆவார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பல தடைகளை முறியடித்து பொதுவாழ்வில் முன்னேறியவர். ஜார்க்கண்ட் ஆளுநராக 6 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும்போது அந்தப் பதவியை அலங்கரிக்கும் முதலாவது பழங்குடியினராகவும், இரண்டாவது பெண்மணியாகவும் இருப்பார். பழங்குடியினர் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பது அந்த இனத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பதாலும், செய்யப்படும் பெருமை என்பதாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” இவ்வாறு பாமக தலைமை நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.