பாட்னா: பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் ஐபோன் 13 புரோ: 256 ஜிபி மெமரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான டெண்டருக்கான அழைப்பை இப்போது வெளியிட்டுள்ளது நீதிமன்றம்.
பிஹார் மாநிலத்தில் பிரிட்டிஷ் கால ஆட்சியில் இருந்தே இயங்கி வருகிறது இந்த நீதிமன்றம். தற்போதைய தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல் செயல்பட்டு வருகிறார். சுமார் 30-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நீதிபதிகள் அனைவருக்கும் ஐபோன் 13 புரோ ஸ்மார்ட்போன் வாங்க நீதிமன்றத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 13 புரோ: கடந்த 2021 செப்டம்பர் வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. ஐந்து வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 6.1 இன்ச் டிஸ்பிளே, பின் பக்கத்தில் மூன்று கேமரா, 12 மெகாபிக்ஸல் கொண்ட முன்பக்க கேமரா, iOS 15 இயங்குதளம், 3095 mAh பேட்டரி திறன், வயர்லஸ் சார்ஜிங் வசதி போன்றவை இதில் உள்ளது. நான்கு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது.
தற்போது இதில் 256 ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போனை நீதிபதிகளுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,29,900 என தெரிகிறது. இதற்கான டெண்டரை தான் சப்ளையர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து கேட்டுள்ளது நீதிமன்றம்.
இந்த டெண்டரில் ஜிஎஸ்டி மற்றும் சேவை கட்டணங்கள் உட்பட போனின் விலையை குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெண்டர் கோரும் நிறுவனங்கள் போனை பராமரிக்க வேண்டும் எனவும். வாரன்டி காலத்தின் போது சாதனத்தின் பொருட்களில் சேதம் இருந்தால் அதனை இலவசமாக மாற்றிக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது டெண்டர் அழைப்பில் தெரிவித்துள்ளது.