இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தினசரி பாலியல் பலாத்கார எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், 14 ஆயிரத்து 456 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர். இதில், பஞ்சாப் மாகாணம் முன்னிலை வகிக்கிறது. இந்த தகவலை, பெண்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில், தினசரி பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த அம்மாகாண அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் அட்டா டரார் கூறியதாவது:பஞ்சாபில், தினசரி 4 – 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகின்றன.
இதை கண்காணித்து கட்டுப்படுத்த, அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவு செய்யப் பட்டு உள்ளது. இது தொடர்பாக, பெண்கள் உரிமை அமைப்பு, ஆசிரியர்கள், வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். பெற்றோரும் பாதுகாப்பு குறித்து பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான நடவடிக்கையை அரசு கையில் எடுத்துள்ளது. பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement