கராச்சி: பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில், அனுபவம் இல்லாத டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் செய்த பிரசவத்தின்போது, தாயின் வயிற்றில் இருந்த சிசு, கழுத்து துண்டாகி உயிரிழந்தது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த, இளம் ஹிந்து பெண், பிரசவ வலி ஏற்பட்டதால், அங்கிருந்த கிராம மருத்துவ மையத்துக்கு சென்றுள்ளார்.மகப்பேறு மருத்துவர் இல்லாத நிலையில் அங்கிருந்த வேறு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், பிரசவம் பார்த்துள்ளனர்.
போதிய அனுபவம் இல்லாத ஊழியர்கள், பிரசவத்தின்போது, தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் தலையை வெளியே எடுக்கப் பார்த்துள்ளனர்.ஆனால் தலை துண்டானது. உடனே, தலையை தாயின் கர்ப்பப் பைக்குள் திணித்துள்ளனர்.உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த தாய் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு பிரசவம் பார்க்க வசதியில்லை என்பதால், சற்று தொலைவில் உள்ள லியாகத் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு, அந்த தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் மூலம், குழந்தையின் தலையும் வெளியே எடுக்கப்பட்டது. இதையடுத்து, மரணத்தின் விளிம்புக்கு சென்ற அந்த தாய் மீட்கப்பட்டார்.இதற்கிடையே, சிசுவின் உயிரிழப்புக்கு காரணமான இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு சிந்து மாகாண அரசு உத்தரவிட்டுஉள்ளது.
மாலத்தீவு யோகா நிகழ்வில் வன்முறை
மாலே:தெற்காசிய நாடான மாலத்தீவில், இந்திய துாதரகம் சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தலைநகர் மாலேவில் நடந்த யோகா நிகழ்வில், துாதரகம் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட, 150க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்போது, மைதானத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், யோகாவில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. வன்முறையில் ஈடுபட்டோரை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், ‘பெப்பர் ஸ்பிரே’ ஆகியவற்றை பயன்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ”வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி தெரிவித்தார்.
இந்திய நிகழ்வுகள்:
போலீசை தாக்கிய ‘உற்சாக’ இளம்பெண்
மும்பை : மஹாராஷ்டிராவில் அளவுக்கு அதிகமாக மது குடித்த இளம்பெண், போலீஸ் அதிகாரியை தாக்க முயற்சித்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், விருந்துக்கு சென்ற இளம்பெண் ஒருவர், அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். பின் தன் தோழியர் சிலருடன் காரில் வீடு திரும்பினார். வரும் வழியில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். இளம்பெண்கள் வந்த காரையும் போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்த இளம்பெண், காரில் இருந்து இறங்கி, போலீசாரை சரமாரியாக திட்டினார். போலீஸ் அதிகாரி ஒருவரின் தலை முடியை இழுத்து, எட்டி உதைக்க முயற்சித்தார். பின், நடுரோட்டில் படுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணின் செயல்களை அங்கிருந்த சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். அந்தப் பெண் குறித்த தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள துலிபல் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல், புல்வாமா மாவட்டத்தில் உள்ள துஜ்ஜான் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஜெய்ஷ் – இ – முகமது இயக்கத்தைச் சேர்ந்த மஜீத் நசீர் உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மஜீத், சமீபத்தில் சப் – இன்ஸ்பெக்டர் பரூக் அகமதுவை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
தமிழக நிகழ்வுகள்:
கடத்தல் பேர்வழிக்கு 12 ஆண்டு சிறை
சென்னை : மும்பையில் இருந்து தமிழகத்துக்கு, ‘கோகைன்’ போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்த, டான்சானியா நாட்டை சேர்ந்தவருக்கு, 12 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
22 சுவாமி சிலைகள் உடைப்பு
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே துளசாபுரம் கிராமத்தில், இரு கோவில்களில் இருந்த, 22 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளியிடம் ரூ.21.64 லட்சம் மோசடி
தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த 37 வயது பந்தல் தொழிலாளியிடம் காஸ் ஏஜன்சி வழங்குவதாக ரூ. 21.64 லட்சம் மோசடி செய்த பீஹாரைச் சேர்ந்த ரோஷன்குமார் 28, தீபக்குமார் 27, பல்ராம் 20, ஆகியோரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
எஸ்.ஐ., யை தாக்கிய தொழிலாளி கைது
நாகர்கோவில் : குமரி அருகே குடும்பபிரச்னை தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருந்த எஸ்.ஐ. முரளிதரனை தாக்கிய மீன்பிடி தொழிலாளி ரீகன் 34, கைது செய்யப்பட்டார்.
குமரிமாவட்டம் மண்டைக்காடு அருகே புதுாரை சேர்ந்தவர் ரீகன். அதே பகுதியை சேர்ந்த மேரி டார்வின் மெல்பாவை 2015ல் காதலித்து திருமணம் செய்தார். இரண்டு மகன்கள் உள்ளனர். ரீகன் தினமும் மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மேரி டார்வின் மெல்பா தாய் வீட்டுக்கு சென்றார். அங்கும் சென்ற ரீகன் தகராறு செய்துள்ளார், இதனால் அவரது தந்தை ஜாண் நாயகம் மண்டைக்காடு போலீசில் புகார்செய்தார். இந்த மனு மீது எஸ்.ஐ., முரளிதரன் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த ரீகன், ‘குடும்ப பிரச்னையை விசாரிக்க உனக்கு அதிகாரம் உண்டா ‘எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டதோடு எஸ்.ஐ. முகத்தில் குத்து விட்டதில் உதடு கிழிந்தது. காயமடைந்த எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரீகனை கைது செய்த போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ராணுவ அதிகாரி வீட்டில் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூரில் ராணுவ அதிகாரி வீட்டின் கதவுகளை உடைத்து பணம், அலைபேசி, கேமரா திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அங்குராஜ் நகரில் வசிப்பவர் ஆனந்தராஜ் 49. இவர் இந்திய ராணுவத்தில் சுபேதார் மேஜராக உத்தரபிரதேசத்தில் பணியாற்றுகிறார். 10 நாட்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்துார் வந்த ஆனந்தராஜ், நேற்றுமுன்தினம் சிவகாசியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மதியம் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 80 ஆயிரம், நவீன கேமரா, அலைபேசி ,பல்வேறு பொருட்கள் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் கீதா , குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.