பிலிம்பேர் விழாவில் நடனம் ; தகர்ந்துபோன வில்லன் நடிகர் லட்சியம்
திமிரு படம் மூலம் ஸ்ரேயா ரெட்டியின் வலதுகையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகர் விநாயகன். அதன்பிறகு ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தாலும் மலையாளத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் விநாயகன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கம்மட்டிப்பாடம் என்கிற படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார்.
ஒருபக்கம் வித்தியாசமான நடிப்பிற்காக பேசப்பட்டாலும் இன்னொரு பக்கம் ஏதாவது சர்ச்சையாக கருத்துக்களைக் கூறி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் விநாயகன். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், தனக்கு சினிமாவில் நடிகராக நுழைய வேண்டும் என்கிற எண்ணம் இருந்ததில்லை என்றும் நடன இயக்குனர் ஆவதற்கே தான் விரும்பியதாகவும் மும்பை சென்று பிலிம்பேர் விருது விழா மேடையில் நடனமாடுவதை தான், லட்சியமாக கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார் விநாயகன்.
அதன்படி கேரளாவில் இருந்து மும்பைக்கு சென்று நடன பயிற்சி எடுக்கவும் செய்தார் விநாயகம். ஆனால் அவரது பாஸ், 50 பேர் கொண்ட நடன குழுவில் விழா மேடையில் நடனம் ஆடுவது எல்லாம் ஒரு லட்சியமா என அவரை உற்சாகம் இழக்க செய்துவிட்டாராம். அதைத்தொடர்ந்து நடனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் கேரளா திரும்பிய விநாயகனுக்கு, அப்போதுதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வர, அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு அப்படியே நடிகராகி விட்டேன் என்று கூறியுள்ளார் விநாயகன். மும்பையில் இருந்து கேரளா திரும்பிய அந்த சமயம் தன் வாழ்க்கையில் திருப்புமுனையான நேரம் என்றும் கூறியுள்ளார் விநாயகன்.