வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களின் வீடுகளை இடிக்கவில்லை. சட்டவிரோதமாக, அனுமதி பெறாமல் கட்டியதாலேயே அவர்களுடைய வீடுகள் இடிக்கப்பட்டன’ என, உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முஸ்லிம் மதத்திற்கு எதிராக, பா.ஜ.,வில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா கருத்து கூறியதை எதிர்த்து உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. இதில் சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர்.
பொதுவான வழக்கு
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூர், பிரயாக்ராஜில், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரின் வீடுகள், ‘புல்டோசர்’ மூலம் இடிக்கப்பட்டன. இதை எதிர்த்து, முஸ்லிம் அமைப்பு ஒன்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் உத்தர பிரதேச அரசுகூறியுள்ளதாவது:சட்டவிரோதமாக, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளையே, கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் நகராட்சி நிர்வாகம் இடித்து உள்ளது.
இதில் முறையாக ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் எந்த வழக்கையும் தொடரவில்லை. ஆனால், முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒரு முஸ்லிம் அமைப்பு பொதுவான வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வாறு வழக்கு தொடர்வதற்கு அந்த அமைப்புக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை.
பொய்யான உருவகம்
வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது, பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்படியே, சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களின் வீடுகள் இடிக்கப்படவில்லை.ஆனால், இரண்டு சம்பவத்தையும் இணைந்து, மதத்தின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொய்யான உருவகத்தை இந்த அமைப்பு ஏற்படுத்திஉள்ளது. அதற்காக இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement