மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 40க்கும் அதிகமானோர் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு எங்கு அழைத்து செல்லப்படுகிறோம் என்று தெரியாமல் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், “ஏக்நாத் ஷிண்டேயுடன் சென்ற இரண்டு எம்.எல்.ஏ.க்களை இரவில் போலீஸாரும், ரெளடிகளும் சேர்ந்து அடித்துள்ளனர். நிதின் தேஷ்முக் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து தப்பிச்செல்ல பார்த்துள்ளார். அவரை பிடித்து அடித்துள்ளனர். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டேயுடன் சென்ற எம்.எல்.ஏ.க்களிடமிருந்து எங்களுக்கு தொடர்ந்து போன் கால்கள் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களை குஜராத்திற்கு கடத்தி வந்துவிட்டதாக போனில் தெரிவித்தனர். சட்டமேலவை தேர்தல் முடிந்த பிறகு தானேயில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறி காரில் ஏற்றி குஜராத்திற்கு அழைத்து வந்துவிட்டதாக எம்.எம்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இது தொடர்பாக காணவில்லை என்று போலீஸில் புகார் செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி
இதற்கிடையே மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கொஷாரியா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் உத்தரவுக்காக ஆளுநர் காத்திருப்பதாக கருதப்படுகிறது. மற்றொரு புறம் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் மும்பையில் முகாமிட்டு கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று காலை 11 மணிக்கு கட்சியின் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரேயையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து பேச இருக்கிறார். இதற்கிடையே அஸ்ஸாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் நகல் இன்றோ அல்லது நாளையோ மகாராஷ்டிரா ஆளுநரிடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே ஆளுநர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.