மும்பை: அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கியுள்ளதால், மகாராஷ்டிர மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தான் ராஜினாமா செய்யத் தயார் என்று அம்மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
சரத்பவாரும், கமல்நாத்தும் தன்னை தொடர்புகொண்டு பேசியதாகவும், முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏக்னாத் ஷிண்டேவுடன் சென்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவர்கள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, “ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்ற எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வருகிறது. அதிருப்தியாளர்களில் யாராவது நான் முதல்வராக தொடர்வதில் விருப்பமில்லை என்று கூறினால் நான் இப்போதே பதவியை ராஜினாமா செய்துவிடத் தயார். சிவசேனாவையும் இந்துத்துவாவையும் ஒருபோதும் பிரிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?
தனது ஆதரவாளர்களுடன் குஜராத் மாநிலத்தில் முகாமிட்டிருந்த ஏக்நாத் ஷிண்டே தற்போது ஆதரவாளர்களுடன் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்துவந்தார்.
கடந்த திங்கட்கிழமை நடந்த சட்ட மேலவைத் தேர்தலில் சிவசேனா கட்சியின் 12 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் ஆதரவு பெற்ற தலித் தலைவரான சந்திரகாந்த் ஹன்டோர் தோல்வியடைந்தார். 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தது சிவசேனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான சிவசேனாவின் 21 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றார். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிருப்தி எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஆதரவாளர்களுடன் அசாம் சென்ற ஷிண்டே: இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் அசாமுக்கு சென்றுவிட்டார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் இன்னும் பரபரப்பு தொற்றியுள்ளது. குஜராத் போல் அசாமும் பாஜக ஆளும் மாநிலம். மகாராஷ்டிரா அரசியல் சர்ச்சை உட்கட்சி பூசல் என்று பாஜக மழுப்பினாலும் கூட இதில் பாஜக தலையீடு இருப்பதை மறுப்பதற்கில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சிவசேனா சர்ச்சை 10 முக்கியத் தகவல்கள்:
- ஏக்நாத் ஷிண்டே. இவர் உத்தவ் தாக்கரேவின் நம்பிக்கைக்குரியவர். படைத் தளபதி. சில நாட்கள் முன்பு வரை அப்படித்தான் அறியப்பட்டார். ஆனால், அவர் அண்மைக் காலமாகவே முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
- ஆனால், இன்னமும் தான் பால் தாக்கரேவின் தொண்டர் எனக் கூறுகிறார் ஷிண்டே. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் சிந்தனைகளுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். பால் தாக்கரே இந்துத்துவாவை எங்களுக்கு கற்பித்துவிட்டு சென்றுள்ளார். அதிகாரத்துக்காக பால் தாக்கரேவின் சிந்தனைகளுக்கு துரோகம் செய்ய மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.
- அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சென்ற ஷிண்டேவை சட்டப்பேரவை குழுத் தலைவர் பதவியில் இருந்து சிவசேனா நீக்கியுள்ளது. அஜய் சவுத்ரி அந்தப் பதவியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- முதல்வர் உத்தவ் தாக்கரே கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார். சிவசேனாவுக்கு 166 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. அவர்களுக்கு இன்னும் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் அவர்கள் ஆட்சி அமைக்க முடியும்.
- தங்கள் கட்சி எம்எல்ஏ நிதின் தேஷ்முக் தாக்கப்பட்டதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.
- 22 எம்எல்ஏ.க்களைத் தவிர, மேலும் சில எம்எல்ஏக்களும் சிவசேனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சர்ச்சையால் சிவசேனா ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது.
- சிவசேனா மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று மதியம் ஆலோசனை நடத்தினார். கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் ஷிண்டேவிடம் ஆலோசனை நடத்தித் திரும்பியுள்ளனர்.
- அசாம் தலைநகர் குவஹாத்தி விமான நிலையத்திற்கு வந்த ஷிண்டே, “எனக்கு 46 எம்எல்ஏ.க்களின் ஆதரவு உள்ளது. 40 பேர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் 6 பேர் சுயேச்சைகள்” என்று கூறிச் சென்றார்.
- பாஜக இவ்விவகாரத்தில் தங்களுக்குத் தொடர்பு இல்லை எனக் கூறினாலும், அசாம் சென்ற ஏக்நாத் ஷிண்டேவை அம்மாநில முதல்வர் சந்தித்திருப்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ”நாங்கள் சிவசேனாவில் நடப்பதை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாஜக அரசை விமர்சித்துவந்த சிவசேனா வீழுமா, இல்லை மீளுமா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் அம்பலமாகிவிடும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.