நகராட்சியாக இருந்துவந்த கரூர் சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் மார்க்கெட்டில் ரூ.6.7 கோடி மதிப்பீட்டில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதையொட்டி, கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பாக, மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றவிருப்பத்தால், மார்க்கெட்டில் உள்ள தங்க விநாயகர் கோயிலில் யாக வேள்வி பூஜை நடைபெற்றது. இந்த யாகத்தை அனைத்து வணிகர் சங்க கரூர் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர் ராஜு தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இந்த யாக பூஜையில் கலந்துகொண்டனர்.
அதோடு, வணிகள்களும் திரளாக இந்த பூஜையில் கலந்துகொண்டு விநாயகரை வழிப்பட்டனர். இதற்கிடையில், இந்த பூஜையில் கலந்துகொள்ளும்படி, கரூர் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் அசோக்குமார், பலதரப்பு மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று, கரூரைச் சேர்ந்த வணிகள் பலரும் இந்த பூஜையில் கலந்துகொண்டனர். அதுவும் குறிப்பாக, கரூரைச் சேர்ந்த ஹக்கீம் என்ற வியாபாரி ஒருவரும் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, விநாயகர் தரிசனம் செய்தார். அப்போது கோயில் அர்ச்சகர் ஹக்கீமுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்ய, அந்தச் சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள், ‘இது, மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சி’ என்று கூறி நெகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து ஹக்கீமிடம் பேசினோம்.
“நாங்கள் எல்லோரும் வியாபாரிகள். அதனால், அசோக்குமாருடனான நட்பின் பெயரிலும், மத நல்லிணக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தேன். எனது கொள்கையே, யாதும் ஊரே, யாவரும் கேளிர், ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுதான். மதநல்லிணக்கம், சமய ஒற்றுமைக்காக வேண்டிதான் இப்படி கலந்துக்கிட்டேன். எல்லாருமே ஒரே தாய் மக்கள்தான்.
அதுபோலதான், நாங்க இங்கே பழகிட்டு இருக்கோம். மனம் அது செம்மையானால், மந்திரத்தை ஜெபிக்க வேண்டாம்னு திருமூலர் சொல்றார். அந்த கோட்பாட்டின்படி வாழ்ந்துகிட்டு வர்றோம். எல்லாரும் நாங்க சகோதரர்கள்தான். இங்க உள்ளவங்க எல்லாம் அக்கா, தங்கச்சி, மாமன், மச்சான் உறவுகள்தான். இந்த மத நல்லிணக்கமும், சகோதரத்துவமும் எப்போதும் எங்களிடையே தொடரும்” என்றார்.