மதுரை: “மாணவர்களை கையாள்வது என்பது தற்போது கத்தி மேல் நடப்பதுபோல் இருக்கிறது. அதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும், தாயாகவும் இருந்து வழிநடத்தினால்தான் மாணவர்களை ஒழுங்குபடுத்த முடியும்” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பில்லர் மையத்தில் புதன்கிழமை பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார் முன்னிலை வகித்தார். தொடக்கக் கல்வி இயக்கக இயக்குநர் க. அறிவொளி வரவேற்றார்.
பயிற்சியை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: “ஓர் இயக்கத்தில் தலைவனுக்கும் தொண்டனுக்கும் இருக்கும் அடிப்படை கட்டமைப்பு போல், நமது துறைக்கும் இருக்க வேண்டும் என நினைப்பவன். கல்வித் துறைக்கு பெருமை கிடைத்தால் அதை அதிகாரிகளுக்கும், ஏதாவது குறைகள் ஏற்படும் போது அதை நானே ஏற்றுக் கொள்ளும் பழக்கமுடையவன். எந்த விதத்திலும் அதிகாரிகளை விட்டுக் கொடுக்கமாட்டேன்.
நாம் கூட்டாக சேர்ந்து பயணித்தால் தான் கல்வித் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். ஆட்சி அமைந்துவிட்டது, பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சராகிவிட்டோம், 5 ஆண்டுகாலத்தை ஓட்டி விடலாம் என நினைக்கும் அரசியல்வாதியல்ல நான். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கொள்கையை, ஆசையை உடையவன். அதற்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும்.
எண்ணும் எழுத்தும் திட்டம் அரசாங்கத்தின் கண்ணும் கருத்தும் என முதல்வர் கூறியிருக்கிறார். எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வெற்றி என்பது நமது அரசாங்கத்தின் வெற்றி. மாணவர்களை கண்காணிக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது. ஆசிரியர்கள் நிறைய புத்தகங்களையும், மனிதர்களையும், சமூகத்தையும் வாசியுங்கள். ஒவ்வொரு சேதியும் ஒரு நீதியைத் தரும்.
தற்போது மாணவர்களை கையாள்வது என்பது கத்தி மேல் நடப்பதுபோல இருக்கிறது. எல்லா மாணவர்களையும் ஒரே மாதிரி கையாள முடியாது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நண்பர்களாக, வழிகாட்டியாக, தாயாக இருக்க வேண்டும். அதன்படி வழி நடத்தினால்தான் மாணவர்களை ஒழுங்குபடுத்த முடியும்.
பெற்றோர்கள், மாணவர்கள் அரசுப் பள்ளியைத் தேடி வரும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும். அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஆரம்பக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்படுகிறார். அதற்கு நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்” என்று அமைச்சர் பேசினார்.
இப்பயிற்சியில், 38 முதன்மைக் கல்வி அலுவலர்கள், துணை இயக்குநர்கள், 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 2009, 2012-ல் நேரடியாக நியமிக்கப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் 67 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா நன்றி கூறினார்.