சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதில், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், புதிய தொழில் திட்டங்கள் மூலம் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. தொழில் தொடங்க வருவோருக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்குதல், பல்வேறு சலுகைகள் அளித்தல் போன்ற நடவடிக்கைகள் அதில் அடங்கும். இதுதவிர, வெளிநாடுகளுக்கு சென்று புதிய முதலீடுகளை ஈர்க்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அமீரக நாடுகளுக்கு சென்று வந்தநிலையில், அடுத்ததாக இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. இதில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அத்துடன், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசியம், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தரும் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் பெற்று, விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.