மகாராஷ்டிராவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், தான் முதல்வராக இருக்கக் கூடாது என சொன்னால் கூட உடனடியாக ராஜினாமா கடிதத்தை கொடுக்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு 55 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியாளராக மாறியுள்ளார். இதனால், சிவசேனா கட்சியின் 33 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஏக்நாத் ஷிண்டே அசாம் மாநிலம் கவுஹாத்தியில் தங்கியுள்ளார். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் நிலையில், 46 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் தனக்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தெரிவிக்க ஏக்நாத் ஷிண்டே ஆளுநரிடம் அவகாசம் கோரியுள்ளார்.
அதிருப்தி சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்காத நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யக் கூடாது என கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியதாக சிவசேனா கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதனால் அவரை சந்திக்க முடியவில்லை எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத் தெரிவித்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தான் தயாராக இருப்பதாக உத்தவ்தாக்கரே அறிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே, “தேவைப்பட்டால் கட்சித் தலைவர் பொறுப்பையும் துறக்க தயாராக இருக்கிறேன். ஆனால், அதை கட்சியில் இருப்பவர்கள் மட்டுமே கூற வேண்டும். எனக்கு எதிராக ஒரு எம்எல்ஏ இருப்பதாக தெரிந்தாலும், நிச்சயம் பதவி விலகி விடுவேன். மகாராஷ்டிரா மக்கள் வாக்களித்து நான் முதல்வராகி இருக்கிறேன். எனக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. கடைசியில் அரசியல் சாசனம் காப்பாற்றப்படுகிறதா என்பதுதான் முக்கியம்.
பேரம் நடத்த என் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரைகள் அல்ல. முதல்வர் பதவி இன்று வரும் நாளை போகும். ஆனால் நேர்மையும் மக்களின் அன்பும் என்றும் உடன் வருவது. மகாராஷ்டிராவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், நான் முதல்வராக இருக்கக் கூடாது என சொன்னால் உடனடியாக ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்துவிட்டு எனது பெட்டிகளுடன் முதல்வர் மாளிகை காலி செய்து விட்டு கிளம்பி விடுவேன். அதை அவர்களின் முகத்தில் முன் சொல்ல வேண்டும்” கூறியுள்ளார்.
இதனிடையே, “சிவசேனா எம்எல்ஏ யாரும் எங்களுடன் தொடர்பில் இல்லை. நாங்கள் ஏக்நாத் ஷிண்டேவிடம் பேசவில்லை. இது சிவசேனாவின் உள்விவகாரம்; பாஜகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை” என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் ராவ்சாகேப் பாட்டீல் தன்வே தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்: பாஜக தலைவருடன் கவுகாத்திக்கு பறந்த 4 சிவசேனா எம்.எல்.ஏக்கள்.. நடப்பது என்ன?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM