மூத்த பத்திரிகையாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் சென்னையில் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 56. புனைவு, பொழுதுபோக்கு, ஆன்மிகம் என்று பல துறைகளில் ஜனரஞ்சகமாக எழுதும் திறமை பெற்றவர் அவர். இயல்பான, எளிமையான மொழிநடையில் எதையும் விவரிப்பவை அவர் எழுதும் கட்டுரைகள்.
ப்ரியா கல்யாணராமனின் சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். தந்தை மற்றும் தாயார் பெயரை இணைத்து தனக்குப் புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். கல்லூரிப் படிப்பு முடித்து, தனக்குக் கிடைத்த அரசுப்பணியையும் மறுத்து, குமுதம் வார இதழில் தன் 21 வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பிற்காலத்தில் குமுதம் வார இதழின் ஆசிரியராக உயர்ந்து, பல ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து பணியாற்றியவர்.
குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி அவர்களால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்ட ப்ரியா கல்யாணராமன், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியவர். குமுதத்தில் பல தொடர்களையும் எழுதியவர். 108 திருப்பதிகள், கோயில் சொல்லும் கதைகள், தெற்கத்தி தெய்வங்கள், மகிமை மிக்க மகான்கள், ஜகத்குரு, ஆதலினால் ஆலயம் செல்வீர், ஜாக்கிரதை வயசு 16, ஆண்டவன் உங்கள் அருகில் என்று அவர் எழுதிய பல தொடர்கள் நூல்களாகவும் வெளியாகியிருக்கின்றன.
இளம் பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் இயல்பு கொண்டவர் ப்ரியா கல்யாணராமன்.
ப்ரியா கல்யாணராமனின் மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர். ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.