Thanjai Farmers protest against Cauvery Management board agenda about Mekedatu dam: மேகதாது அணை குறித்து காவிரி ஆணையத்தில் விவாதிக்கக் சட்டப்பூர்வ அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மேகதாது அணை குறித்து காவிரி ஆணையத்தில் விவாதிக்க கூடாது எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில், தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்ற இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர மோகன் தலைமை வகித்தார்.
இதையும் படியுங்கள்: பேசித் தீர்த்துக்கொள்ளலாம்… பொதுக்குழுவுக்கு வாருங்கள்; ஓ.பி.எஸ்-க்கு இ.பி.எஸ் அழைப்பு
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும், ஆதரவளிக்கக் கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
காவிரி ஆணையத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க சட்டப்பூர்வ அனுமதி அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனக் கூறிய விவசாயிகள், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட எடுக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.முகமது அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜி.ராமகிருஷ்ணன், கே.அபிமன்னன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க நிர்வாகி கே.வசந்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயபால், துரை.மதிவாணன், ஆர்.பி.முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்