கரோமலை: மேகாலயாவின் தெற்கு கரோமலை மாவட்டத்தில் நேரிட்ட கடும் நிலச்சரிவால் 4 நாட்களாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துவிட்டனர். வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேகாலயாவில் பெய்த கனமழையை தொடர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு கரோமலை மாவட்டம், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 6 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி 4 வயது குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு கரோமலை மாவட்டமும் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற மேகாலயா முதலமைச்சர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை ஆய்வு செய்தார். அதனை சீரமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இரு மாவட்டங்களிலும் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.