பெங்களூரு: மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான இறுதி திட்ட வரைவு அறிக்கையில் எல்லைகளை இறுதி செய்து தாக்கல் செய்யாததால், அனுமதி கோரும் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நீக்கியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முதல்கட்ட திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்தது. இதில் 5,252 ஹெக்டேர் பரப்பளவில் அணை கட்டப்பட இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
கர்நாடக அரசு இந்த திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது.
இந்நிலையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்ட வரைவு அறிக்கையை பரிசீலனை செய்தது. திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கையை தயார் செய்து, அணை அமைய இருக்கும் எல்லைகளை இறுதி செய்து தாக்கல் செய்யமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக அரசு எல்லைகளை ஆய்வு செய்து இறுதி வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
எனவே கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்ட விண்ணப்பத்தை பரிசீலனை பட்டியலில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது. “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான எல்லைகளை ஆய்வு செய்து, இறுதி வரைவு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இறுதி வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறையின் அனுமதியையும் பெறவில்லை. இதனால் மேகேதாட்டு திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற இருந்தது. இதில் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, “மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே ஆணைய கூட்டங்களில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க கூடாது” என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
மேலும் தமிழக அரசின் பிரதிநிதிகள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, ‘ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது’ என வலியுறுத்தினர். இந்நிலையில் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 5-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.