கிழக்காசிய நாடுகளில் புத்த மதம் மிகப்பெரும் செல்வாக்கு பெற்றிருந்தாலும், அதன் தோற்றுவாய் இந்தியாதான். போத் கயா, சாரநாத், குஷி நகர் போன்ற அதிமுக்கிய புத்தத் தலங்களுக்கு அடுத்தநிலையில், தவாங் முக்கிய புத்தத் தலமாக இருக்கிறது. சீனா தனது எல்லை விரிவாக்க நோக்கில் தவாங்கைக் குறி வைப்பதற்கும் இது முக்கிய காரணமாக இருக்கிறது.
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் புத்த மதத்தினர் பெரும்பான்மை எண்ணிக்கையில் வாழ்வதாலும், இந்திய – சீன எல்லைப்பகுதியாக விளங்குவதாலுமே, அருணாசல பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் அப்பகுதி மக்களுக்குப் பரிச்சயமாக இருக்கின்றன. ராணுவ ட்ரக்குகள் அடிக்கடி கடந்து செல்வதையும், கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி ராணுவ வீரர்களின் நடமாட்டத்தையும் அவர்கள் வெகு இயல்பாகவே பார்க்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய புத்தக் கோவிலையும் (monastery) , புத்தர் சிலையையும் பார்த்த பிறகு, அன்றைய நாளை நிறைவு செய்தோம். அறைக்குச் சென்று சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்த போது, நன்கு இருட்டியிருந்தது. ஆஷு, எனக்கு முன்பே எழுந்து சமையலறைக்குச் சென்றிருந்தான். சோனம் கேனாவுடன் அவளின் ஆன்டியும், சமையலறையில் இருந்தார். அவருக்குத் தோராயமாக 70 வயது இருக்கலாம். அவர் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் எங்கள் உரையாடலை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.
உரையாடலின் முக்கிய அம்சங்களை, அவள் அவர்கள் மொழியில் சொல்லும்போது, அதனைக் கேட்டு அவர் சிரிப்பார். நாளை போர் நினைவிடத்துக்குச் செல்லலாம் என ஆஷு என்னிடம் சொன்னான். தவாங்கின் முக்கியத் தலங்களைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஆர்வம், ஆஷுவிடம் மிகுந்திருந்தது. எங்களின் சாத்தியங்களுக்குட்பட்ட எல்லை வரை சென்று வர வேண்டும் என, அவன் தன் விசாரிப்புகளின் வழியே திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தான். பொதுப்போக்குவரத்து அறவே இல்லாத அந்நகரில், வாடகை வண்டிகள் எடுத்துப் பயணிப்பதற்கான பொருளாதார வாய்ப்பு இல்லாத சூழலில், நான் எந்தத் தேடலுக்குள்ளும் செல்லவில்லை.
தவாங் நகரில் எனது இருப்பே நிறைவளிக்கக்கூடியதாக இருந்தது. என் பயணங்களில் பெரும்பாலும், நான் அப்படித்தான் இருந்திருக்கிறேன். கோவா, அந்தமான் சென்றபோதுகூட ஸ்கூபா டைவிங், பாரா ரைடிங் சென்றதில்லை. சுற்றுலாப் பயணியைப் போல் அல்லாது, அந்நகரத்துவாசியைப் போல அன்றாடத்தைக் கடப்பதிலும் நிறைவு கொள்வேன்.
தவாங்கின் பயணத்திட்ட முடிவுகளை நான் ஆஷுவிடமே விட்டு விட்டேன். ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருக்கும் மூதாட்டியின் முன்னிலையில், மங்கோலிய சாயல் கொண்ட குறும்புக்காரப் பெண்ணுடன் பேசுவதும், அந்த அடுப்பின் தகரக் குழாயைத் தொட்டுத் தொட்டு கைகளைச் சூடேற்றுவதும் கூட எனக்குப் புதுவித அனுபவத்தைக் கொடுத்தது. சிறு சிறு தருணங்களின் தொகுப்பும், பேரனுபவமாய் உருக்கொள்வதை எனது முந்தைய பயணங்களில் உணர்ந்திருக்கிறேன்.
முரட்டுக் குளிர் தாக்க ஆரம்பித்தபோது, மணி ஆறரையைத் தாண்டியிருந்தது. நான் ஆஷுவுடன் வெளியே சென்று, ஒரு பாட்டில் ரம் வாங்கினேன். ஆஷு மதுபானங்களின் விலையை விசாரித்தான். அவனின் நண்பர்கள் சிலர் அருணாசலில் மதுபானங்களின் விலை குறைவு என்பதால் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்கள் என்று சொன்னான். அவர்கள் சொன்ன விலையை எல்லாம் குறித்துக் கொண்டான்.
பாண்டிச்சேரி, கோவா செல்கிறபோது, எனக்கும் இதுபோன்ற கோரிக்கைகள் வருவதுண்டு. அதனை நான் பகிர்ந்து கொண்ட போது ஆஷு சொன்னான். “நான் எனது பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட மதுவுக்காக செலவழிக்க மாட்டேன். என் நண்பர்கள் பணம் அனுப்பினால் அவர்கள் பணத்தில் இருந்து வாங்கிக் கொடுப்பேன்” என்றவன், அடுத்து “என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்தவர். அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அட்டையில் மாதத்துக்கு நான்கு பாட்டில்கள் வாங்க முடியும். ஆனால், அந்த அட்டையை இதுவரையிலும் நாங்கள் பயன்படுத்தியதே இல்லை” என்றான். தனது சமூகத்தின் மதிப்பீட்டின்படி உறுதியாக நிற்கும் அவனது தீர்க்கம், எனக்குப் பிடித்திருந்தது.
ரம்முக்குள் வெந்நீரை ஊற்றிக்கலந்து, ஆவி மேலெழ குடிப்பது கறுப்பு காபி குடிப்பதைப் போலவே இருந்தது. நான் இந்தப் பயணத்தை வீடியோவாக பதிவு செய்து யூடியூபில் ஏற்றுவேன் என்று சொன்னதும், சோனம் தானும் ஓர் யூடியூப் சேனல் வைத்திருப்பதாகச் சொன்னாள். அவளது மொபைல் ஹாட் ஸ்பாட்டின் கொடையில், நான் இணையத்தினுள் சென்று அவள் சேனலைப் பார்த்தேன்.
அந்த மாநிலத்துக்குள்ளான அவளின் பயணங்கள், புத்தக்கோயிலில் கூட்டாகச் சேர்ந்து அவள் ஆடிய நடனம், அவளின் கவிதைகளை வாசித்து வீடியோவாக ஏற்றியிருந்தாள். சேனலை சப்ஸ்கிரைப் செய்யச் சொன்னாள். எனது சேனலை பார்த்தவள் சப்ஸ்கிரைப் செய்யவே இல்லை. “இது அறமல்ல” என்றேன். அவள் சிரித்துக் கொண்டே விளையாட்டாய் மறுத்தபோது நான் அவள் போனைப் பிடுங்கி சப்ஸ்கிரைப் செய்தேன். அவளின் ஆன்டி அதையெல்லாம் சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் அந்த விடுதியில் தங்கியிருந்த நான்கு நாள்களில் சோனம் எப்போதும் மகிழ்ச்சியோடு முகத்தில் புன்னகை படரவே இருந்தாள். பழகிய சில நிமிடங்களிலேயே அணுக்கமான உணர்வை சிலரால் ஏற்படுத்தி விட முடியும். சோனம் கேனாவும் அப்படிப்பட்டவள்தான்.
காதல் உறவு நிலை குறித்து ஆஷுவிடமும், என்னிடமும் கேட்டாள். ஆஷு, அந்த வாடையே ஆகாதுங்க என்பதைப் போல இதுவரையிலும் யாரையும் காதலித்ததில்லை என்றான். அடுத்து அவள் என் பக்கம் திரும்பிய போது “முதலில் நீ சொல்” என்றேன். “எனக்கு பிரேக் அப் ஆகி விட்டது” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். “எனக்கும்தான்” என்றேன்.
இப்போது தனக்கு ஒரு நபர் மீது க்ரஷ் இருப்பதாகச் சொன்னவள், அவரது புகைப்படத்தைத் தனது போனில் எடுத்துக் காண்பித்தாள். அந்தப் புகைப்படத்தில் பக்கவாட்டுத் தோற்றத்தில் நரேந்திர மோடி சிரித்தபடி இருந்தார். நான் அவளை புருவமுயர வினோதமாகப் பார்த்ததும் “மோடிதான் என் க்ரஷ்” என்றாள். “வாழ்த்துகள்” என்று சொல்லிவிட்டு ஆஷுவைப் பார்த்தேன். அவன் முகம் சற்று இறுக்கமாகவே இருந்தது. குளிரின் தாக்கமா இல்லை அடுத்த நாளுக்கான பயணத்திட்டத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தானா என்று தெரியவில்லை.
மணி எட்டைக் கடந்ததுமே, சுமோ டிரைவர்கள் வழக்கம் போல வந்து, ரம் பாட்டில் வாங்கி ஊற்றிக் குடித்துக் கொண்டு, குளிர்காய்ந்தபடியே பேசத் தொடங்கினர். பிப்ரவரி மாதம் என்பது அருணாசலப் பிரதேசத்தில் குளிர் உச்சத்தில் இருக்கும் காலகட்டம் என்பதால், இந்த நாள்களில் பயணிகளின் வருகை குறைவாகவே இருக்கும் என்று கூறினர்.
உச்சத்தைத் தொடுவதுதானே எல்லோருடைய இலக்கும்…. குளிர்காலத்தில் பனிப்பிரதேசங்களுக்குச் செல்கையில்தான் குளிரின் உச்சத்தை உள்வாங்கி உணரமுடியும். அதனை கிரகித்துக்கொள்கிற தன்மை உடலுக்கு இல்லையென்றாலும் மன வலிமை மட்டுமே அதனை சாத்தியப்படுத்துகிறது என்று தோன்றியது. நான் அடுத்த சுற்று ரம் ஊற்றி, வெந்நீர் கலந்து அவர்களுக்கு சியர்ஸ் சொன்னேன்.
திரிவோம்…