குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை காண்போம்.
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு களமிறக்கப்பட்டு உள்ளார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் பதவிக்கு, பிரதீபா பாட்டிலுக்கு பிறகு வேட்பாளராக களமிறங்கும் இரண்டாவது பெண் திரெளபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.
President election: பாஜக தரப்பு வேட்பாளர் இவர்தான்!
யார் இந்த திரெளபதி முர்மு?
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பாய்டாபோசி என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடியினப் பெண் திரெளபதி முர்மு, 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தார். சந்தால் சமூகத்தைச் சேர்ந்த பிராஞ்சி நாராயண் டுடுவின் மகளான திரெளபதி முர்மு, புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் படித்தவர். அரசியல் ஆர்வம் காரணமாக திரெளபதி முர்மு பாஜகவில் இணைந்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்த திரெளபதி, 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை எஸ்டி மோர்ச்சாவின் மாநிலத் தலைவராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி முதல், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகவும் பணியாற்றினார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!
ஆசிரியராகப் பணிபுரிந்த திரௌபதி முர்மு, கவுன்சிலராகவும் பின்னர் எம்எல்ஏவாகவும் ஆனார். நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போலவே, திரௌபதி முர்முவும் நீண்ட காலமாகக் கல்வித் துறையில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆம் தேதி 64வது பிறந்த நாளை கொண்டாடிய திரெளபதி முர்முவுக்கு, இதை விட சிறந்த பிறந்த நாள் பரிசு வேறொன்றும் இல்லை.