வெளிநாட்டில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய இந்தியர் உயிர் பிழைத்துள்ளார்.
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் லால்டேலு ராம் ஹர்கேஷ் (52).
இவர்,அபுதாபியில், ‘போர்மேனாக’ பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சில நாட்களுக்கு முன் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வாயு தொல்லை என நினைத்து உதாசீனப்படுத்தினார்.
சில நாட்களுக்கு பின் காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்களை அணுகிய போது, சந்தேகத்தின் அடிப்படையில் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அதன் முடிவில், டி.டி.பி., எனப்படும், ‘த்ராம்போடிக் த்ராம்போசைடோபீனியா பர்புரா’ என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
டி.டி.பி., என்பது ரத்தத்தில் ஏற்படும் அரியவகை நோய். 10 லட்சம் பேரில், 46 பேர் இவ்வகை நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் ரத்த குழாயில் ரத்தம் உறைந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால், மூளை, சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, ‘லைப்கேர்’ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஹர்கேஷ் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, 12 பேர் அடங்கிய பல்நோக்கு சிறப்பு மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சையை துவங்கியது. 18 நாட்கள் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின், ஹர்கேஷ் குணமடைந்தார்.
மருத்துவர்கள் கூறுகையில், டி.டி.பியை தடுக்க எந்த முறையும் இல்லை.
ஒரு நோயாளிக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டால், புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மற்றும் குறைந்த உப்பு, குறைந்த கொழுப்பு உணவு, சரியான தூக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது நலம் பெயர்க்கும் என கூறியுள்ளனர்.