தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், அடுத்த மாதம் முடிவடைகிறது. இதனையொட்டி, அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
எதிர்க்கட்சிகள் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளும் பாரதிய ஜனதா கட்சி, பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்முவை தனது வேட்பாளராக அறிவித்திருக்கிறது. பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்…
-
திரெளபதி, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிறந்தது ஜூன் 20, 1958. தற்போது 64 வயதாகிறது.
-
இந்திய நாட்டின் வளர்ச்சியடையாத மாவட்டத்தில் பிறந்த திரெளபதியின் குழந்தைப் பருவம், வறுமையுடன் எதிர்நீச்சல் போட்டதாகவே இருந்திருக்கிறது. கல்வியை மட்டுமே கைப்பிடித்து, ஜனாதிபதி வேட்பாளர் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் திரெளபதி.
-
புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில், கலைபிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், ஆசிரியராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
-
திரெளபதியின் கணவர் பெயர் ஷ்யாம் சரண் முர்மு. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
-
திரெளபதியின் தனிப்பட்ட வாழ்க்கை எதிர்பாரா இரண்டு துயரங்களை உள்ளடக்கியது. கணவரையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் விபத்து மற்றும் நோய் காரணமாக அடுத்தடுத்து இழந்தவர், ஒற்றை மகளை ஆசிரியப்பணியின் சொற்ப வருமானத்தில் போராடி வளர்த்திருக்கிறார்.
-
இதன்பிறகு, ஒடிசாவின் நீர்ப்பாசனத் துறையில், கிளார்க் ஆகவும் பணிபுரிந்திருக்கிறார் திரெளபதி.
-
1997-ல் கவுன்சிலராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த திரெளபதி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார்.
-
2000-ம் ஆண்டு பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்தபோது வர்த்தகம், போக்குவரத்து, மீன்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் பொறுப்புகளை வகித்தார்.
-
2007-ம் ஆண்டு, ஒரு எம்.எல்.ஏ.வாக சமுதாயத்துக்கு இவர் செய்த முன்மாதிரி சேவைகளுக்காக, ஒடிசா சட்டமன்றம் இவருக்கு பண்டிட் நீலகண்டா விருது வழங்கி கௌரவித்தது.
-
2015-ல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்றவர் திரெளபதி. அப்போது அவருக்கு வயது 59.
-
திரெளபதி முர்மு, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பு கிடைக்கும். தவிர, ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெறுவார்.
அட்வான்ஸ் வாழ்த்துகள் மேடம்!