கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில், ஒரு மாத பச்சிளம் குழந்தையை குரங்கு பறித்துச் சென்றதால் அது உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தான்சானியாவில் உள்ள கோம்பே நேஷன் பூங்காவுக்கு அருகிலுள்ள மவாம்கோ கிராமத்தில் வசிப்பவர் ஷயிமா சயத். இவரின் ஒரு மாதமேயான ஆண் குழந்தை, குரங்குகளிடம் சிக்கி உயிரிழந்துள்ளது.
வீட்டில் தாய், குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்குப் படை அவரது கையிலிருந்த பச்சிளம் குழந்தையைப் பிடுங்கிச் சென்றது. பயத்தில் உதவிக்காக அப்பெண் கத்த, விரைந்து வந்த கிராமத்தினர் குரங்குகளைத் தாக்க முயன்று குழந்தையைக் கைப்பற்றினர். அந்தப் போராட்டத்தில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, ஆனாலும் குழந்தை உயிரிழந்தது.
’கிராம மக்கள் பலத்தை பயன்படுத்தி குழந்தையை மீட்க முயன்றதால் குழந்தை இறந்தது’ என்று தெரிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள். குழந்தையின் தலை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
குரங்குகள் கிராமத்துக்குள் வருவதைத் தடுக்க பொதுமக்கள் தகவல் தர வேண்டும் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், யானைகள் போன்ற பெரிய வன விலங்குகள் அருகில் உள்ள கிராமங்களின் நிலத்தை ஆக்கிரமித்து சில உயிரிழப்புகளை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.