இன்று… அதாவது ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள்! 48 வயதில் அடியெடுத்து வைக்கிறார் `தளபதி’ என்பதால் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்தாண்டு விஜய்க்கு இன்னொரு சிறப்பும் சேர்ந்திருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அவர் சில படங்களில் சிறகடித்தாலும் ஒரு நாயகனாக முதன்முதலில் அறிமுகமான படம் `நாளைய தீர்ப்பு’. இந்த வகையில் திரையுலகில் முப்பதாவது ஆண்டிலும் கால்பதிக்கிறார். விஜய் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இனி…
1. விஜய் ஹீரோவாக ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகமானாலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். ‘வெற்றி’, ‘குடும்பம்’, ‘வசந்தராகம்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘இது எங்கள் நீதி’ என அந்தப் படங்களில் லிஸ்ட் நீள்கிறது. அவர் முதன்முதலில் ஆக்ஷன் ஹீரோவான படம், ‘பகவதி’. அவரது கரியரில் திருப்புமுனை படங்கள் விக்ரமனின் ‘பூவே உனக்காக’, பாசிலின் ‘காதலுக்கு மரியாதை’. அவர் ஆக்ஷன் ஹீரோவாகக் காலூன்றிய படங்கள் வரிசையில் ‘திருமலை’, ‘கில்லி’, போன்றவற்றைப் பட்டியலிடலாம். நீண்ட நாள் கழித்து பிரேக் கொடுத்த படங்கள் ‘காவலன்’, ‘நண்பன்’.
2. விஜய் ஒரு கார் லவ்வர். சினிமா தவிர அவர் பெரிதும் விரும்புவது கார் கலெக்ஷன்கள் மற்றும் கார் டிரைவிங். இப்போது அவரிடம் வோல்வோ, ரோல்ஸ்ராய்ஸ் எனப் பல சொகுசு கார்கள் இருந்தாலும், இன்னோவா கார் ஒன்றையும் வைத்துள்ளார். அவசரமாக வெளியே கிளம்ப வேண்டியிருந்தால் இன்னோவா காரை எடுத்துக் கொள்வார். ஆனால், படப்பிடிப்புக்கு சென்று வர அவர் செல்ஃப் டிரைவ் செய்வதில்லை. அதேசமயம் ஸ்டூடியோவிற்குள் நடக்கும் படப்பிடிப்பு என்றால் அவரே காரை ஓட்டிச் சென்று வருவார்.
3. தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள், எந்தப் படம் என்ன நிலவரம், ஒவ்வொருத்தருக்குமான பிசினஸ் விஷயங்கள், ஒவ்வொரு வாரமும் வெளியான படங்களின் தியேட்டர் நிலவரம் எனத் தன் துறை சார்ந்த விஷயங்கள் குறித்து எப்போதும் செம அப்டேட்டில் இருப்பார். ஆனால், அது குறித்து அவரிடம் யாராவது தகவல்களைப் பகிரும் போது, அப்போதுதான் புதிதாக அதைக் கேட்பது போல ரியாக்ட் செய்வார்.
உங்களுக்கு எந்தளவு விஜய்யைப் பிடிக்கும்? தெரிந்துகொள்ள இந்த குவிஸ்ஸில் கலந்துகொள்ளுங்கள்.
4. முன்பெல்லாம் கதைகள் கேட்கும் விஷயத்தில் அப்பா எஸ்.ஏ.சியும், விஜய்யும் சேர்ந்து கதை கேட்பார்கள். பல வருடங்களாக அப்படியில்லை. இப்போது எல்லாம் அடுத்த புராஜெக்ட்டுக்கான கதைகள் கேட்கும் போது, ஒரு சாதாரண ரசிகனாகத்தான் கதை கேட்க உட்காருவார். போனை சுவிட் ஆஃப் செய்துவிடுவார். அறிமுக இயக்குநராக இருந்தாலும், ஏற்கெனவே இயக்கிவர்களாக இருந்தாலும் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் கவனமாகக் கேட்பார். இடைவேளை வரை கேட்ட பிறகு ஒரு காஃபி பிரேக் எடுத்துக் கொள்வார். கதை அவருக்குப் பிடித்துவிட்டால் புது இயக்குநர் என்றால் அவரின் செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி வைத்துக் கொள்வார்.
5. நடிக்க வந்த ஆரம்பக் காலத்தில் இருந்து இன்றுவரை ரசிகர்களை மதிப்பார். சக நடிகர்கள், ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினால், முகம் சுளிக்க மாட்டார். ‘வாங்க’ என புன்முறுவலோடு புகைப்படத்திற்கு ஒத்துழைப்பார்.
6. அம்மா ஷோபா பாடகி என்பதால், விஜய்க்கும் பாடும் ஆர்வம் தானாக வந்துவிட்டது. முன்பு இளைராஜாவின் ரசிகர், அவரது காரில் ராஜாவின் ஆல் டைம் ஃபேவரைட் பாடல்களின் கலெக்ஷன் எப்போதும் இருக்கும். ‘காதலுக்கு மரியாதை’யில் அவரது இசையில் பாடியதை இப்போதும் சிலாகித்து சொல்வார். வீட்டில் இருந்தால் பாடல்கள் பாடிக்கொண்டே உலாவுவார். அது எந்த ஹீரோவின் படப் பாடலாக இருந்தாலும் குஷியாகப் பாடுவார்.
7. எப்போதும் அதிர்ந்து பேசுவதை விரும்பாதவர். தன் உதவியாளர்கள், அவரது நெருங்கிய வட்டத்தினருடன் பேசும் போது, ‘நார்மலாகப் பேசுவதைவிட மிகமிக மென்மையான குரலிலேயே பேசுவது அவரின் வழக்கம். மிகமிக உன்னிப்பாகக் கேட்டால் மட்டுமே அவர் சொல்லும் விஷயம் நமக்குப் புரியும்’ என்பார்கள்.
8. கதை தேர்வு விஷயத்தில் இன்னொன்றையும் கடைபிடிக்கிறார். அந்தக் கதை அவரை இம்ப்ரஸ் செய்திருக்க வேண்டும். அல்லது சமூகத்திற்கு எதாவது ஒரு நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும் என விரும்புகிறார். கதைகளில் நேரடி அரசியலையும், பன்ச்களையும் தவிர்த்து விடுகிறார். ஒன்லைனோ, முழுக்கதையோ படம் துவங்குவதற்கு முன்பு வரை தன் கருத்துகள், கரெக்ஷன்களை முன்வைப்பார். படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டால், எந்த தலையீடும் செய்வதில்லை. இயக்குநரின் ஆர்ட்டிஸ்ட் எனப் பெயரெடுக்கவே விரும்புவார்.
9. ஒரு படத்திற்கான கால்ஷீட் விஷயத்தில், இத்தனை நாள்கள்தான் கொடுப்பேன் என எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. கதைக்குத் தேவைப்படும் நாள்களைக் கொடுக்க நினைப்பார். அவர் இரண்டு வேடங்களில் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்திற்கு 150 நாள்கள் கால்ஷீட் கொடுந்திருந்தார். அதைப்போல இப்போது கம்போர்ட் ஜோனை விரும்புகிறார். இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, லோகேஷ் கனகராஜ், இவர்கள் தன்னை கம்போர்ட் ஜோனில் வைத்திருப்பதாக உணர்வதால்தான் அவர்களிடம் தொடர்ந்து படங்கள் செய்ய விரும்புகிறார். அந்த வரிசையில் நெல்சனுக்கும் இப்போது இடமுண்டு.
10. விஜய்க்கு ‘இளைய தளபதி’ எனப் பட்டம் கொடுத்தது ரசிகர் ஒருவர்தான். ஆரம்பக் காலங்களில் ரசிகர்கள் அவருக்கு எழுதும் கடிதங்களைத் தவறாமல் படித்து வருவார். அந்தக் கடிதங்களில் ரசிகர் ஒருவர் அவரைப் பாராட்டி ‘இளைய தளபதி’ என நெகிழுந்து உருகியதில், அந்தப் பட்டம் அவரைக் கவர்ந்திழுத்துவிட்டது. ‘காதலுக்கு மரியாதை’ படத்திற்கு முன் ஆரம்பித்த அந்தப் பட்டத்தை ‘பைரவா’ வரை தொடர்ந்தார். அதன்பிறகு ‘மெர்சல்’ படத்திலிருந்து ‘தளபதி’யாக புரொமோஷன் ஆனார்.
11. அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவதைப் பெரிதும் விரும்புவார். இதுவரை தனது கரியரில் 25க்கும் மேற்பட்ட புது இயக்குநர்களைக் கொண்டு வந்திருக்கிறார்.
12. முன்பெல்லாம் படப்பிடிப்பு இல்லாத நாள்களில், சாலிகிராமத்தில் உள்ள தனது திருமண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்து வந்த விஜய், இப்போது பனையூரில் உள்ள வீட்டில் சந்திக்கிறார். இப்போது அந்தப் பொறுப்பை விஜய்யின் மக்கள் இயக்கப் பணியைக் கவனித்து வரும் புஸ்ஸி ஆனந்த் ஏற்றிருப்பதால், அவரது ஷெட்யூல்படி ரசிகர்களைச் சந்திக்கிறார்.
13. கடந்த 2008 பிறந்த நாளின் போது நற்பணி மன்றக் கொடியை அறிமுகப்படுத்தினார். உழைத்திடு, உயர்ந்திடு, ‘உன்னால் முடியும்’ என அதில் தாரக மந்திரத்தையும் பொறித்தார். “என் ரசிகர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். நான் பொதுவானவன். ரசிகர்கள் தங்கள் அடையாளத்திற்காகக் கொடி கேட்கிறார்கள். நான் அறிமுகப்படுத்துகிறேன்” என்றார். இப்போது அது மன்றக்கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.
உங்களுக்கு எந்தளவு விஜய்யைப் பிடிக்கும்? தெரிந்துகொள்ள இந்த குவிஸ்ஸில் கலந்துகொள்ளுங்கள்.
14. மேடையில் பேச ஆரம்பிக்கும் போது முதலில் சொல்வது இதைத்தான். “என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு ரசிகர்களே…”
15. ஃபிட்னஸில் அதிக அக்கறை செலுத்துவார். வீட்டிலேயே ஒர்க் அவுட்டிற்கான விஷயங்களை அமைத்துள்ளார். பாடல் காட்சிகளை படமாக்குவதற்கு முன் அதற்கான ரிகர்சலுக்கும் ஒத்துழைப்பார்.
16. படப்பிடிப்பில் சில கெட்டப்புகளில் இருக்கும் போது, அவரிடம் புகைப்படம் எடுக்க சக நடிகர்கள் விரும்பினால் ‘இந்த லுக்ல எடுக்கக்கூடாது’ என நேரடியாக மனம் புண்படும்படி பேசமாட்டார். அதை அவரது உதவியாளர்களிடம் சொல்லி விஷயத்தை கன்வே செய்வார். ‘படம் ரிலீஸ் ஆகும் வரை அந்தப் புகைப்படத்தை பொதுவெளியில் பகிர வேண்டாம். லுக் வெளியாகிவிடும், எனவே ரிலீஸுக்கு பிறகு ஷேர் பண்ணிக்குங்க’ எனச் சொல்லி வைத்திடுவார்.
17. படப்பிடிப்பு பிரேக்குகளில் கிரிக்கெட், பாட்மின்டன் விளையாடுவார். இயக்குநர், உதவி இயக்குநர், சின்ன நடிகர்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் விளையாடுவது அவரது ஹாபி.
18. மகன் சஞ்சய் படம் டைரக்டர் ஆகப் போறார், நடிகர் ஆகப் போறார் எனச் செய்திகள் கிளம்பியதும் விஜய்யிடம் இது குறித்து கேட்டார்கள். அப்போது விஜய் சொன்னது இதுதான். “குழந்தைகள் என்ன விரும்புகிறார்களோ அதில் சாதிக்கட்டும். அவங்க வாழ்க்கையை அவங்க முடிவு பண்ணிக்கட்டும். ஒரு பெற்றோரா நாம செய்ய வேண்டியது அவங்க வளர்ச்சிக்கு உறுதுணையா நிற்கறதுதான். மத்தபடி நீ இதுதான் பண்ணியாகணும்னு நாங்க எதுவும் சொன்னதில்ல” என்கிறார்.
19. விஜய்யின் ஆரம்பக்கால படங்களில் ஒரு ஆச்சரியம், அவரது கேரக்டர் பெயரும் விஜய் என்றிருக்கும். இப்படி டஜன் கணக்கான படங்களில் அவரது பெயரையே படத்தின் கதாபாத்திரத்திற்கும் சூட்டியிருப்பார்கள்.
20. விருதுகளில் கவனம் செலுத்துவதில்லை. ரசிகர்கள் தன்னை மாஸ் ஹீரோவாக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சிந்தனையை மட்டும் கவனத்தில் வைத்து படங்களைத் தேர்ந்தெடுப்பார் என்கிறார்கள்.
21. நகைகள் அணிவதை இப்போது தவிர்த்துவிட்டார். முன்பு சின்னதாக மோதிரம் ஒன்றை அணிந்து வந்தார். அதன்பிறகு பிரேஸ்லெட் ஒன்றை அணிந்திருந்தார். சமீப வருடங்களாக அப்படி எதுவும் அணிவதில்லை.
22. அவரது 25வது படம் ‘கண்ணுக்குள் நிலவு’. ரெண்டாயிரமாண்டின் முதல் படமும் இதுதான். அவரது 50வது படம், ‘சுறா’. அடுத்து அவரின் 66-வது படம் ‘வாரிசு’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. குடும்பப் படமான இதைத் தொடர்ந்து 67-வது படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார்.
ஹேப்பி பர்த்டே விஜய்! விஜய் படங்களில் உங்களின் ஃபேவரைட் எது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.