Live: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம்… “கட்சியில் சர்வாதிகார, அராஜகப் போக்கு; தர்மம் மறுபடியும் வெல்லும்" – ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ் கோரிக்கை நிராகரிப்பு..!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியால் அவமானப்பட்ட பன்னீர்!

“தனிநபரின் உள் அரங்கத்தில் கூட்டம் நடப்பதால் அதனை தடுத்து நிறுத்த முடியாது. மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்’’ என ஆவடி காவல்துறை தெரிவித்துள்ளது

“தர்மம் மறுபடியும் வெல்லும்” – ஓ.பி.எஸ்

அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் நாளை(ஜூன் 23) நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாகவே ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் பரபரப்பாகவே உள்ளது. இதில், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு நடைபெறும்” என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஒருவர் நேற்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ஓ.பி.எஸ் தற்போது இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்’ என ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், “மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்குச் சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனக் கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில், `தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்” என ஓ.பி.எஸ் ட்வீட் செய்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.