பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான `சாம்ராட் பிரித்விராஜ்’ படம் கடந்த ஜூன் 3-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் வெளியானது. இப்படம் ராஜஸ்தானை ஆட்சி செய்த புகழ்பெற்ற மன்னர் ‘பிரித்விராஜ் சௌகான்’ வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு உருவான படம். படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அக்ஷய் குமார் இவ்வாறு கூறியிருந்தார்.
“துரதிர்ஷ்டவசமாக, நம் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் சாம்ராட் பிருத்விராஜ் சௌகானைப் பற்றி 2-3 வரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் படையெடுப்பாளர்களைப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டுள்ளது. நமது கலாசாரம் மற்றும் நம் இந்திய மன்னர்கள் பற்றி குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. முகலாயர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதே சமயம் நம் இந்திய மன்னர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களும் சிறந்தவர்கள்தான்” என்று பேசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து அண்மையில் நேர்காணல் ஒன்றில் அக்ஷய் குமார் பற்றி பேசிய சாம்ராட் பிரித்விராஜ் படத்தின் இயக்குநர் சந்திரபிரகாஷ் துவேதி, “அக்ஷய் குமாரின் மகன், மன்னர் ‘பிரித்விராஜ் சௌகான்’ பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வுதான் ‘இந்து வரலாறு’ பற்றி சொல்லிக்கொடுக்கத் தவறிவிட்டோம் என்று அக்ஷய் குமார் கேள்வி எழுப்பத் தூண்டுகோலாக அமைந்தது” என்று கூறினார்.
மேலும், அக்ஷய் குமாரின் ‘சாம்ராட் பிரித்விராஜ்’ படத்தை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற கேள்வி குறித்துப்பேசிய அவர், “அக்ஷய் குமார் 30 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அவர் ஒரு நல்ல நடிகர். திறமையானவர். ஆனால் பிருத்விராஜின் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவரைப் புறக்கணிப்பதில் அர்த்தமில்லை. பான் மசாலாவை விளம்பரப்படுத்துவது அல்லது சிவபெருமானுக்கு பால் கொடுக்கக்கூடாது என்று கூறுவது போன்ற அவரின் கடந்த கால செயல்களைக் காரணம்காட்டி அவரது படத்தைப் புறக்கணிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் இந்த விஷயங்களுக்கும் திரைப்படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறினார்.