குவாஹாட்டி: அசாமில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரம்மபுத்ரா மற்றும் பராக் நதியில் நீர்வரத்து மேலும் உயர்ந்ததால் புதிய இடங்களையும் மூழ்கடித்துள்ளது. இதனால் 32 மாவட்டங்களை சேர்ந்த 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாமின் நாகோன் மாவட்டம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 4.57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 147 நிவாரண முகாம்களில் 15,188 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். இம்மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று பார்வையிட்டார்.
மேலும் சில நிவாரண முகாம்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கவும் தொடர்ந்து தயார் நிலையில் இருக்கவும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார். கச்சார் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மற்ற 2 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் பிற அமைப்பினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.