பெங்களூரு:
பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்தவர் குமாரநாயக் (வயது 45). இவர், கொடிகேஹள்ளி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்தாா். கடந்த 12-ந் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் அவர் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு ஆன்லைன் விற்பனை பிரதிநிதியான கார்த்திக் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.
இதுபற்றி குமாரநாயக் கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக், குமாரநாயக்கை கண்மூடித்தனமாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு குமாரநாயக் பரிதாபமாக இறந்து விட்டார். அடுக்குமாடி குடியிருப்பு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் குமாரநாயக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விற்பனை பிரதிநிதியான கார்த்திக்கை கைது செய்தனர்.