அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், ‘உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கான தேதியை இப்போதே நீங்கள் அறிவிக்க வேண்டும். அந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ்-ன் ஆதரவாளர், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
“நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக வந்துள்ளது. அதை மீறி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இந்த பொதுக்குழுவே செல்லாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோம்.
அவைத்தலைவர் நியமனம் செல்லாது. ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இணைந்து தான் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது.
அம்மா எண்ணப்படி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்; கூட்டுத் தலைமைதான் கட்சி வளர்ச்சிக்கு உகந்தது என்பது ஒருங்கிணைப்பாளரின் கருத்து” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.