சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், கூட்டம் நடைபெறவுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார்.
முன்னதாக அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வாரா மாட்டாரா என்ற நிலை நீடித்து வந்தது. இந்தநிலையில், இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ஓபிஎஸ், மாற்றுப்பாதை வழியாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார்.
அப்போது அங்கு குவிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓபிஎஸ்-க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னர் புறப்பட்டு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு முன்னதாக வந்தார் ஓபிஎஸ்.
போலீஸார் பாதுகாப்பு: பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் வானகரம் பகுதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிந்துள்ளனர். இதில் ஓபிஎஸ் இபிஎஸ் இருதரப்பு ஆதரவாளர்களும் இருப்பதால், அசாம்பவித சம்பவங்களைத் தடுக்கும்பொருட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில், “அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என்றும், திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை அந்த கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் கட்சிதான். எனவே, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.