அதிமுக வரலாற்றில் இதுவரை நடைபெற்ற சில பொதுக்குழுக்கூட்டங்கள் பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
அவை எப்போது நடந்தன? அவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன?
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் மறைந்த பின்னர், அதே மாதக் கடைசியில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரத்தில் கூடியது. சுமார் 2 ஆயிரத்து 100 பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், சசிகலா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக
ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பி.எஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டன. இதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றது, டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளர் ஆனது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றது எனக் காட்சிகள் வேகமாக மாறின.
எதிரும் புதிருமாக இருந்த ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாக இணைந்தனர். இதனையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூடியது. இதற்கு தடை விதிக்கக் கோரி டிடிவி தினகரன், அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
பின்னர் நடைபெற்ற பொதுக்குழுவில் சசிகலா நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுகவில் புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM