சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணயின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இந்த அழைப்பை ஏற்று டெல்லி சென்றுள்ளார் ஓபிஎஸ். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. அதனால் டெல்லி செல்கிறேன்” என்றார். தொடர்ந்து ஒற்றைத் தலைமை குறித்து டெல்லி தலைவர்களுடன் விவாதிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு ஓபிஎஸ் பதில் எதுவும் கொடுக்காமல் நகர்ந்து சென்றார்.
ஓபிஎஸ் உடன் அவரது மகன் ரவீந்திரநாத்தும் டெல்லி சென்றுள்ளார். அவரிடம் செய்தியாளர்கள், ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கேள்வியை எழுப்ப அதற்கு, “wait and see” என்று மட்டும் பதிலளித்தார். மேலும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஓபிஎஸ் உடன் டெல்லிச் சென்றுள்ளனர்.