அஸ்ஸாமின் 34 மாவட்டங்களில் 41 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் குஷியாரா, லோங்காய், சிங்லா ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மாநிலத்தின் பல பகுதிகளை மூழ்கடித்திருக்கிறது.
கனமழை தொடர்ந்து பெய்துகொண்டேயிருப்பதால், மாநிலத்தின் பல முக்கிய சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. அஸ்ஸாமில் இந்த ஆண்டு இதுவரை ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 82 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கீழ் அஸ்ஸாமின் பார்பேட்டா மாவட்டத்தில் மட்டும் 12.3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஸ்ஸாமில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த அந்த மாநில காங்கிரஸ் எம்.பி கெளரவ் கோகோய், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மகாராஷ்டிரா அரசைக் கவிழ்ப்பதற்குப் பதிலாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வர வேண்டும். அஸ்ஸாமுக்கு சிறப்பு நிவாரண தொகை வழங்க வேண்டும்.
பா.ஜ.க அரசு, அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது, அதிகாரத்தை கைபற்றுவதில் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மகாராஷ்டிர அரசை கவிழ்ப்பதிலும், குஜராத் தேர்தலிலும் மும்முரமாக இருக்கிறார். ஏனென்றால் பா.ஜ.க-வுக்கு அதிகாரம்தான் முக்கியம்” என்று மத்திய பா.ஜ.க அரசை சாடினார்.