இன்று காலை தொடங்கிய அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், தற்காலிக அவைத்தலைவர் செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு தலைமை ஏற்க அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.
அவரின் அந்த உரையில், ‘காலம் எல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், பண்பும், பாசமும் கொண்ட நல்லாட்சி நடத்திய புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியை வணங்கி, தற்காலிக கழக அவைத் தலைவரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களை கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தலைமையேற்று நடத்தித் தருமாறு முன்மொழிகிறேன்’ என்று சொல்லிவிட்டு ஓபிஎஸ் அமர்ந்தார்.
இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
அவரின் அந்த உரையில், மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அவர்களை வணங்கி, கழக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான அண்ணன் ஓ பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். நன்றி” என்று ஈபிஎஸ் பேசினார்.
அதனை தொடர்ந்து அதிமுகவின் அவை தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரம்பித்தில் இப்படி ஆரம்பித்த கூட்டம், அடுத்து பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியதும், அனைத்தையும் நிராகரிக்கிறோம் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக சி வி ஷண்முகம் ஆவேசமாக தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற வலியுறுத்தி 2100க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றினை, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஒப்படைத்தார்.
இதனை பதிவு செய்து கொள்வதாக அவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பையும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
அப்போது, ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.