இன்ஸ்பெக்டரய்யா.. நியாயம் செத்து போச்சி..! நீதி செத்து போச்சி..! தீர்ப்ப மாத்தி சொல்லுங்க..!

தூத்துக்குடி அருகே வீட்டை விட்டுச்சென்ற 4 மாத கர்ப்பிணியான அடுத்தவர் மனைவியை மேஜர் என்று கூறி காதலனுடன் சேர்த்து அனுப்பிவைத்த கூத்து காவல் நிலையத்தில் அரங்கேறி இருக்கின்றது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி முத்து. தனியார் வங்கி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவருக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இதன் காரணமாக ஞானதீபம் 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ஞானதீபம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக அந்தோணி முத்து தனது மனைவியை காணவில்லை என்று தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அந்தோனிமுத்துவை தொடர்பு கொண்ட முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் என்பவர், உங்கள் மனைவி ஞானதீபம் அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பிரதீப் என்பவருடன் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையம் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்தோணி முத்து தனது குடும்பத்தாருடன் காவல் நிலையம் சென்றுள்ளார். காவல் ஆய்வாளர் ஜெயசீலன் உனது மனைவியின் கர்ப்பத்துக்கு பிரதீப் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஞானதீபம் மேஜர் என்பதாலும் பிரதீப்புடன் செல்லவே விரும்புவதாலும் அவரை அவருடன் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி அந்தோணி முத்துவின் மனைவி ஞானதீபத்தை காதலன் பிரதீப்புடன் அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து அந்தோணி முத்துவின் தந்தை மற்றும் அந்தோனிமுத்து தனது மனைவியிடம் பேச முற்பட்டபோது அந்தோணி முத்துவை காவல் ஆய்வாளர் பேச அனுமதிக்கவில்லை என்றும் அந்தோணி முத்துவின் தந்தையை போலீசார் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

இதையடுத்து அந்தோணி முத்து மற்றும் பிரதீப்பின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம், காவல் ஆய்வாளர் ஜெயசீலனுக்கு எதிராக புகார் மனு அளித்தனர்.

அப்போது தனது மனைவியை வேறொரு நபருடன் சேர்த்து வைத்து அனுப்பிய காவல் ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தோனிமுத்து கூறினார்.

பிரதீப்பின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை மீட்டு மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

முறையான விவாகரத்து பெறாமல் வேறு திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லாத நிலையில் அடுத்தவர் மனைவியான கர்ப்பிணி பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ஜெயசீலன் மீதான புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.