வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
“மானுடா… மானுடா…” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்க,
“யாருப்பா அது இந்த நடுராத்திரியல??” என்று புரண்டு படுத்த மானுடன் சற்று கண் முழித்துப் பார்த்து அதிர்ச்சியானார்.
உடல் இடது புறமாக அசையாமல் இருக்க, தன் ஆன்மா மட்டும் வலது பக்கம் திரும்பி இருப்பதைக் கண்டு பயந்து எழுந்தார்.
“ஹலோ மானுடா..” என்ற குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிய மானுடன் முன் ஷார்ட்ஸ் டி.சர்ட் மற்றும் தலையில் ‘எமன்’ என்று பொறிக்கப்பட்ட தொப்பியும் அணிந்து ஒருவர் அமர்ந்திருந்தார்.
“நீ… நீ… நீங்க யாரு?”
“ஏம்ப்பா, கொட்ட எழுத்துல என் தொப்பில எமன்-னு எழுதியிருக்கு? அப்புறமும் யாருன்னு கேக்குறியே பா?”
“எமனா??!!!… எமன்னா பெரிய கஜை , பெரிய மீசை, தலையில் கிரீடம் எல்லாம் இருக்குமே?”
“ம்… ஐ அம் அப்கிரேடட்… வெர்ஷன் 15.0” என்ற எமனின் பதிலைக் கேட்டு,
“ஆ” என ஒரு கணம் வாய் பிளந்த மானுடன்,
“சரி. என்ன விஷயமா, இந்த ந.. நடு ராத்திரியில் வந்தீங்க?” என்று கேட்டுக் கொண்டே கனவாக இருக்குமோ என்ற ஐயத்தில் தன்னையே கிள்ள முயன்றார். ஆனால் உடல் பிடிபடவில்லை.
“உங்களக் கூட்டிட்டுப் போலாமுனு தான் வந்தேன்.”
“எ… எ… எங்க?”
“பூமியில உங்க வேலை முடிந்தது. சோ சொர்கத்துக்குக் கூட்டிட்டுப் போலாம்னு வந்தேன். போலாமா?”
சற்று யோசித்து விட்டு கட்டிலில் இருந்து கீழே இறங்கிய மானுடன், தன் குடும்பத்தாரின் புகைப்படம் தாங்கிய போட்டோ ப்ரேமை ஒரு கணம் பார்த்துவிட்டு,
“அப்போ நான் செத்துட்டனா?” என கேட்டார்.
“ஹோ கம் ஆன் மானுடா. உங்க உடலுக்குத் தான் முடிவு, உங்க ஆன்மாவுக்கு இல்ல. சீக்கிரம் வாங்க, வெளியில குதிமான் வெயிட்டிங்”.
மானுடன் வாய் திறக்கும் முன்,
“வெளிய வந்தா குதிமான் யாருன்னு தெரியும்.” என்றார் எமன்.
“ம்.” என்று எமனோடு கிளம்பினார் மானுடன்.
வெளியே குதிரையும், மானும் கலந்த உருவமாக ஒரு விலங்கு நின்று கொண்டிருந்தது. உருவமே சொன்னது அதற்கு ஏன் குதிமான் என்ற பெயர் என்று.
யாரையோ தேடுவது போல மானுடன் சுற்றும் முற்றும் பார்க்க,
“யாரத் தேடுறீங்க?” என எமன் கேட்டார்.
“சித்ரகுப்தரக் காணோமேன்னு…”
“சித்குப்தனுக்கு, கொரோனா, குவாரண்டைன்ல இருக்காரு.” என பரிகசித்தார் எமன்.
மிகவும் பாவமாக மானுடன் பார்க்க,
“சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். இந்தக் கதையில நான் தனியாத் தான் வரேன். குதிமான் ரெண்டு பேர் வெயிட்ட தான் தாங்கும். வாங்க போலாம்” என்று கட்டளையிட குதிமான் மேல் ஏறிக்கொண்டார் மானுடன்.
செல்லும் வழியில் மிகவும் அமைதியாக வந்தார் மானுடன். மனதில் ஒரே வலி. தான் நடத்தும் அனாதை இல்லத்தில் வசிக்கும் பிள்ளைகளை நினைத்து வருந்தினார், தன் குடும்ப உறுப்பினர்களையும் நினைத்துப் பார்த்தார், தன் குடியிருப்பின் வாசலில் எப்போதும் ஓடி ஆடிக் கொண்டிருக்கும் நாய் குட்டியை எண்ணி வாடினார், இனி யார் அதற்கு உணவு கொடுப்பார்கள் என்று, தன் வீட்டு மரத்தடிக்கு வரும் சிட்டுக்குருவியை நினைக்க முற்படும் பொழுது,
“அய்யய்யே….. போதும் மானுடா.. சும்மா தேவையில்லாம கவலைப்படாதீங்க. அவங்க அவங்க பார்த்துப்பாங்க அவங்க லைஃப்ப. ரொம்ப புலம்பாதீங்க” என்று எமன் தடுத்தார்.
“எப்படி நான் என் மனசுல நெனச்சது உங்களுக்கு….?” என்று கேட்டுவிட்டு, எமனின் பதிலை எதிர்பாராமல்,
“ஓகே ஓகே. நீங்க தான் எமன் ஆச்சே” என்று அவரே கூறிக்கொண்டார்.
“ஹி ஹி” சிரித்தார் எமன்.
சொர்க்கம் வந்ததும் குதிமான் நின்றது. எமனும் மானுடனும் கீழே இறங்கினர். சொர்க வாசலை நோக்கி நடக்க முற்படும் பொழுது,
” மானுடா எனக்கு ஒரு ஹக் குடுத்துட்டுப் போங்க” என்று ஒரு குரல் கேட்க திரும்பிப் பார்த்து அதிர்ச்சியான மானுடன்,
“வி.. விலங்கு.. பே… பே… பேசுது…” என்று பிதற்றினார்.
“ஆமா இங்க எல்லோருமே பேசுவோம்” என்ற குதிமானிற்கு ஒரு ஹக் கொடுத்து விட்டு சொர்கத்திற்குள் சென்றார்.
உள்ளே சென்றவர் வாய்பிளந்து நின்றார். உலகில் உள்ள அத்தனை நறுமணப் பூக்களின் ஒன்று கூடிய வாசனை. இடப்புறமும் வலப்புறமும் நீண்ட வரிசையில் நிறைய அறைகள். நடுவே சிவப்புக் கம்பலம், ஆரம்பம் தெரிகிறது ஆனால் அந்த கம்பலத்தின் முடிவு கண்களுக்கு எட்டவில்லை. மிகவும் பரபரப்பாக அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தனர் ஆண் தேவதைகளும் பெண் தேவதைகளும்.
“ மானுடா..” என்று தோளைத் தொட்டார் எமன் .
“சொர்கம் இவ்வளவு பெரியதா?? “என்று மானுடன் கேட்டார்.
“ம். ம் ஆமாமா. சரி வாங்க, உங்க வேலை என்னன்னு நான் விளக்குறேன்.” என்று அங்கேயிருந்த பல்லாயிரக்கணக்கான அறைகளில் ஒரு அறையின் முன்பு அழைத்துச் சென்றார்.
அந்த அறையின் முன்பு இரு பெட்டிகள் இருந்தன. ஒன்றின் மேல் “நன்மை” என்றும் மற்றொன்றின் மேல் “தீமை” என்றும் ஒட்டப்பட்டிருந்தது.
‘என்ன?’, என்பது போல் பார்த்த மானுடனிடம்,
“இதெல்லாம் பூலோக மக்களோட வேண்டுதல்கள். நன்மை, தீமை, ரெண்டுல ஒன்னு தான கடவுள்கிட்ட வேண்டுவாங்க” என்றார் எமன்.
“சரி அத ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க?”
“ நீங்க இந்த நன்மை விண்ணப்பங்கள எல்லாம் கடவுள் கிட்ட கொண்டு சேர்க்கனும் ” எமன் கூற,
“ஆப்போ தீமை?” என்று அவசரமாக மானுடன் கேட்க,
“கேட்டவனுக்கே போய் சேரும். பூமராங் மாதிரி” என்றார் எமன்.
“ஓ… இந்த நன்மை விண்ணப்பங்கள நான் எப்போ கொண்டு போகனும் கடவுள் கிட்ட?”
“இப்பயே போங்க. எப்போ எல்லாம் இந்த பெட்டி நெறையுதோ எடுத்துட்டுப் போங்க”
“கடவுள் எங்கே?”
“அதோ அந்த என்டுல. இந்த சிவப்புக் கம்பளத்தோட முடிவுல ஒரு பெரிய அறை இருக்கு. அதான் கடவுளோட அறை”
எமன் கைநீட்டிய திசையில் சிவப்புக் கம்பலத்தின் முடிவே தெரியவில்லை.
“ ரொம்ப தூரமா இருக்கும் போலயே. குதிமான் கூட்டிட்டுப் போகுமா என்னய?”
“ம்…??” என்று மானுடனை ஏற இறங்கப் பார்த்த எமன் , “உங்களுக்கு இறக்கை முளைக்குற வரைக்கும் நீங்க நடந்து தான் போகணும்.” என்றார்.
“எப்போ எனக்கு இறக்கை முளைக்கும்?”
“நீங்க கடவுளக் கண்டவுடனே” என்று கூறிய எமன் , “சரி சரி.. நான் உங்கள அப்புறம் பாக்குறேன், எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று விடைபெற்றார்.
எமன் சென்றதும் நன்மை பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடைபோட ஆரம்பித்த மானுடன்,
‘இன்னைக்கு இந்த ஒரு தடவை தான் நடக்கணும். இந்தப் பெட்டியக் கொடுத்துட்டு கடவுளப் பார்த்துட்டா,றெக்கை முளச்சிடும், அப்புறம் பறந்து வரவேண்டியது தான்’. என்று தனக்குத் தானே சமாதானாம் சொல்லிக் கொண்டு நடை போட்டார்.
நம் மணி கணக்கின்படி ஒரு பத்து மணி நேரம் ஆகியிருக்கும், கடவுளின் அறையை அடைந்தார் மானுடன்.
கதவைத் தட்ட முயற்சித்தார், ஆனால் கதவு தானாகவே திறந்தது. உள்ளே சென்றவுடன் பளீர் என்ற மஞ்சள் நிற ஒளி நிறைந்து இருந்தது. கண்கள் இரண்டும் கூச இரு கண்களையும் மூடிக் கொண்டு பெட்டியை நின்ற இடத்திலேயே வைத்துவிட்டு வெளியே ஒடி வந்தார்..
தன் முதுகைத் தடவிப் பார்த்தார் இறக்கை முளைத்ததா என்று. அப்படி ஒரு உணர்வும் இல்லை. ” ஹூம்ம்..” என்ற பெருமூச்சுடன் தனக்குக் கொடுக்கப்பட்ட அறையை நோக்கி நடைபோட்டார். பல மணி நேரங்கள் கழித்து வந்தடையும் போது அடுத்த பெட்டி நிறைந்திருந்தது.
பெட்டியை எடுத்துக் கொண்டு கடவுளின் அறையை நோக்கி நடை போட்டார். இம்முறையும் கடவுளைக் காண முயற்சிக்கும் பொழுது , மஞ்சள் ஒளி கண்களைக் கூச வெளியே ஒடி வந்தார். தன் முதுகைத் தடவிப் பார்த்தார் இறக்கை முளைத்ததா என்று..
முளைக்கவில்லை…
திரும்பி அறையை நோக்கி நடக்கும் தூரத்தை நினைக்கும் பொழுது சலிப்பாக இருந்தது. கால்கள் கடுக்க ஆரம்பித்தது. சற்று நிதானித்து விட்டு, இன்று கடவுளைக் காணாமல் போவதில்லை என்ற முடிவோடு மீண்டும் கடவுளின் அறைக்குள் நுழைந்தார். இம்முறை நுழையும் முன்னமே, கண்களை மூடிக் கொண்டே சென்றவர்,
தாம் வணங்கும் தெய்வத்தின் பெயரை அழைத்தார்…
பதில் இல்லை.
தம் நண்பன் வணங்கும் தெய்வத்தின் பெயரை அழைத்தார்…
பதில் இல்லை.
தம் அண்டை வீட்டார் வணங்கும் தெய்வத்தின் பெயரை அழைத்தார்…
பதில் இல்லை.
“அடக் கடவுளே!” என்று சலித்துக் கொண்டார்.
“என்ன மானுடா ??!!!” என்று கடவுள் குரல் கேட்க, “சாமி” என்று அழைத்து கண்களைக் திறக்க முயன்றார் மானுடன். மீண்டும் மஞ்கள் ஒளி கண்களைக் கூச விழிகளை மூடிக்கொண்டார்.
“சாமி.. ஏன் என்னால உங்களப் பார்க்க முடியல?” என்று ஏக்கத்தோடு மானுடன் கேட்க,
இருக மூடிய கண்களோடு, தான் விரும்பும் உருவத்தில் அகக் கண்களால் தன்னுள் கடவுளைக் கண்டு, விழிகளில் நீர் வழிந்தது மானுடனிற்கு. தன் முதுகில் ஏதோ வித்தியாசமான ஒரு வலி உண்டாயிற்று..
கண்கள் மூடிய வண்ணம், “நீங்கள் எந்த மதத்தின் கடவுள்?”. என்று மானுடன் கேட்க,
“ஹ..ஹ..ஹ.. நான் அனைவருக்கும் பொதுவான கடவுள். நான் உங்கள் எல்லோரின் உள்ளும் இருக்கிறேன். அதை உணராமல் என்னை வெளியே தேடி அலைகிறீர்கள்.எந்த மதம் சார்ந்தும் நான் இல்லை. என்னை சார்ந்து நீங்கள் வாழ்ந்து மனிதம் வளர்க்கச் சொன்னேனே அன்றி என்னை பிரித்து வகுக்கச் சொல்லவில்லை. ” என்றார்.
மேலும் கண்ணீர் கசிந்தது மானுடனிற்கு. கால்கள் தரையிலிருந்து ஒரு அடி மேலே செல்ல, காற்றில் மிதப்பது போல உணர்ந்தார் மானுடன். ஆனால் கண்களைத் திறக்க முயற்சிக்கவில்லை..
கடவுள் தொடர்ந்தார்,
“உங்களுக்குள் கடந்து சென்று நன்மைக்கு மட்டும் தீனி போட்டு நற்குணங்களை விதையுங்கள், உங்களை சுற்றி இருக்கும் பிற உயிர்களுக்கும் நன்மைகளையே செய்யுங்கள் உங்களுக்குள் கடவுளாக நான் வாழ்வேன் என்றென்றும்.” என்றார்.
உன்னதமான இந்த விளக்கத்தை கேட்டு கடவுளை உணரும் பொழுது மிதந்து கொண்டிருந்த மானுடனுக்கு, இறக்கைகள் இரண்டும் முழுவதுமாக வளர்ந்து தேவதை ஆனான்..
-மலர்வழி மணியம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.